மதுரை, தூத்துக்குடி உட்பட தமிழகத்தின் 20 சுங்கச்சாவடிகளில் நாளை (ஆகஸ்ட் 31) நள்ளிரவு முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 54 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இரண்டு பிரிவாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளுக்கும், செப்டம்பர் மாதம் மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கும் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India, NHAI) அனுமதித்துள்ளது.
இதன் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டுக்கான கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் உள்ள 20 சுங்கச்சாவடிகளில் நாளை நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, திண்டுக்கல், திருச்சி,சேலம் ,மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 20 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
இச்சூழலில் கார், வேன்,ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்று வர பழைய கட்டணம் 85 ரூபாயிலிருந்து 90 ரூபாயாகவும் இரு முறை சென்று வர 125 ரூபாயிலிருந்து 135 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் ரூபாய் 2,505 இல் இருந்து 2,740 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இலகு ரக வாகனங்கள் ஒரு முறை சென்று வர 145 ரூபாயிலிருந்து 160 ரூபாயாகவும் இரு முறை சென்று வர 220 ரூபாயிலிருந்து 240 ஆகவும் மாதாந்திர கட்டணம் 4,385 ரூபாயிலிருந்து 4,800 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஒருமுறை சென்று வர கட்டணம் ரூபாய் 290 லிருந்து 320 ரூபாயாகவும் இரு முறை சென்று வர 440 லிருந்து 480 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணமாக ரூபாய் 8770 லிருந்து 9,595 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் இரண்டு அச்சு மிக கனரக வாகனங்கள் ஒரு முறை சென்று வர ரூபாய் 470 லிருந்து 515 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.இருமுறை சென்று வர கட்டணம் 705 ரூபாயிலிருந்து 770 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது மாதாந்திர கட்டணமாக 14,095 ரூபாயிலிருந்து 15,420 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மொத்தத்தில் ஒருமுறை சென்று வர கட்டணம் 5 ரூபாயில் இருந்து 45 ரூபாய் வரையும் இருமுறை பயண கட்டணம் 10 ரூபாயிலிருந்து 65 ரூபாய் வரையும் மாதாந்திர கட்டணம் 235 ரூபாயிலிருந்து 1325 ரூபாய் வரையும் உயர்த்தப்பட்டுள்ளது .
இந்தக் கட்டண நிர்ணயம் அனைத்தும் பாஸ் டேக் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் பாஸ் டேக் இல்லாத வாகனங்கள் இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என டோல்கேட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்த சுங்க கட்டண உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (ஆகஸ்ட் 30) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 20 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 ஆம் தேதி நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக வெளியாகியுள்ள தகவலுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏற்கனவே விலைவாசி உயர்வால், பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், சுங்கக்கட்டணத்தை உயர்த்தினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும். இதனால் ஏழை எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமலும், தேசிய நெடுஞ்சாலைகளை முறையாக பராமரிக்காமலும் சுங்க கட்டணத்தை மட்டும் உயர்த்துவது எந்த வகையில் நியாயம். உடனடியாக சுங்க கட்டண உயர்வை திரும்ப பெறுவதுடன் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாவதியான சுங்க சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த வேண்டும். சுங்க கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறவில்லை என்றால், அனைத்து சுங்க சாவடிகளை முற்றுகையிட்டு தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் நிரந்தரமாக கைவிட வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
’ஜவான்’ முன் வெளியீட்டு விழா: சென்னை வந்தார் ஷாருக்கான்
சிலிண்டர் விலை: 500 ரூபாய் குறைத்த புதுச்சேரி முதல்வர்!