கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி மறுக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு கம்பீரமாக வலம் வந்தது.
கடந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பிற்காக ‘சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாடு’ என்ற கருப்பொருளுடன் வ.உ.சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர் சகோதரர்,
சுப்ரமணிய பாரதி, ராணி வேலு நாச்சியார் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களை மையப்படுத்தி அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டு இருந்தது.
அதனை மத்திய அரசு நிராகரித்த நிலையில், பிரதமர் மோடிக்கு, தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியும் எந்த பயனும் ஏற்படவில்லை.
இதனையடுத்து , டெல்லியில் மறுக்கப்பட்ட அலங்கார ஊர்தியை சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெற செய்ததோடு,
மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வலம் வர செய்தார். இந்த நடவடிக்கை அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் தான் இந்தாண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 23 அலங்கார ஊர்திகளுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
இதனையடுத்து மாநிலத்தின் பெண்கள் அதிகாரம் மற்றும் கலாச்சாரத்தை மையப்படுத்திய தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி கம்பீரமாக தயாரானது.
டெல்லியில் இன்று நடைபெற்ற நாட்டின் 74வது குடியரசு தின விழாவில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களின் அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு அரசின் சார்பில் சங்க காலம் தொட்டு சமூக வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் உதவிய சாதனை பெண்களை போற்றும் வகையில் பெண்கள் அதிகாரம் மற்றும் கலாச்சாரத்தை மையப்படுத்தி உருவாகியிருந்த அலங்கார ஊர்தி கம்பீரமாக வலம் வந்தது.
அதில் சங்ககால பெண் புலவரும், ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், மூதுரை போன்ற காலம் போற்றும் ஞான நூல்களை படைத்தவருமான ஒளவையாரின் உயர்ந்த சிலை அலங்கார ஊர்தியின் முன்பகுதியில் இருந்தது.
அவரைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவரும், சமூக சீர்திருத்தவாதியுமான பத்மபூஷன் முத்துலட்சுமி ரெட்டி, தேவதாசி முறையை எதிர்த்து போராடிய மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்,
மற்றும் காந்தக் குரல் பாடகி பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி, 105 வயதிலும் தனது விவசாயத் துறையில் தீவிரமாக செயல்பட்டு வரும் பத்மஸ்ரீ பாப்பம்மாள் ஆகியோரின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
இதனைத் தொடந்து யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோவிலும் அலங்கார ஊர்தியின் பின்பகுதியில் பிரம்மாண்டமாக இடம்பெற்று இருந்தது.
அணிவகுப்பு பாதையில் பெண் சக்தியை மையப்படுத்தி கம்பீரமாக வந்த தமிழ்நாட்டு அலங்கார ஊர்தியில் பக்கவாட்டில் கொம்பு, மேளம், நாதஸ்வரம், தவில், புல்லாங்குழல் போன்ற இசை கருவிகளை கலைஞர்கள் வாசித்தனர். அவர்களோடு கரகாட்ட கலைஞர்கள் இரு பக்கமும் ஆடி சென்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஆளுநர் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின்
அமெரிக்காவை அசத்திய தமிழக இருளர்களுக்கு பத்மஸ்ரீ விருது: யார் இவர்கள்?