புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய பிரசாந்த் உமாராவை கைது செய்யத் தனிப்படை போலீசார் டெல்லி சென்றுள்ளனர்.
கடந்த 2 நாட்களாகத் தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.
இது பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் கவனத்திற்கும் சென்றுள்ளது.
இது குறித்து தமிழகத்தில் உள்ள அதிகாரிகளுடன் பேசி வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அம்மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார், .
மேலும் தமிழ்நாடு காவல்துறையும் வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு பீகார் டிஜிபி உடன் தொலைபேசி வாயிலாகவும் இந்த பிரச்சனை குறித்துப் பேசியிருந்தார்.
தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 4) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் சி.வெ. கணேசன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
தொடர்ந்து பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் உடன் தொலைபேசி வாயிலாகப் பேசினார்.
அப்போது, அனைத்து தொழிலாளர்களும் எங்கள் தொழிலாளர்கள் என்றும் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று பேசியிருந்தார்.
இதனிடையே தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு வதந்திகள் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இது தொடர்பாகத் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153(A), 505(i) (b) கீழ் தெய்னிக் பாஸ்கர் பத்திரிக்கையின் ஆசிரியர் மீது ஒரு வழக்கும்,
திருப்பூர் மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 153(B), 506(ii) (b) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 56(D) கீழ் தன்வீர் போஸ்ட் என்ற பத்திரிகையின் உரிமையாளர் முகமது தன்வீர் என்பவர் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, தூத்துக்குடி மாவட்டம் சென்ட்ரல் காவல் நிலையத்தில் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 153, 153(A), 504, 505(1(b), 505(1(c), 505(2) கீழ் பிரசாந்த் உமராவ் என்பவர் மீது ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள இவர்களைக் கைது செய்யத் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரின் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் தவறாகச் செய்தி பரப்பிய உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிராசாந்த் உமாராவ் என்பவரைக் கைது செய்யத் தனிப்படை போலீசார் டெல்லி சென்றுள்ளனர்.
மோனிஷா
ஓபிஎஸ் உடன் சமரசமா?: செல்லூர் ராஜூ பதில்!
அதிமுக மாசெக்கள் கூட்டம்: எடப்பாடிக்கு சவால்!