குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்றும் நாளையும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக மூலக்கரைப்பட்டியில் 20 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து ராதாபுரம் 19.1 செ.மீ, நாங்குநேரி 18.6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கனமழை பெய்து வருவதால் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் உள்ள சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 97 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ள மீட்பு பணியில் ஈடுபட இரண்டு தேசிய பேரிடர் மீட்பு குழு படையினர் இன்று இரவுக்குள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு செல்ல உள்ளனர். குறிப்பாக சாத்தான்குளம் பகுதியில் அதிகனமழை பெய்து வருகிறது. 6 மணி நேரத்தில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் அங்குள்ள சில பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாம், பாறைக்கால் மடம், ஊட்டுவால் மடம் போன்ற பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
இதனைதொடர்ந்து அங்குள்ள மக்கள் அருகிலுள்ள பள்ளி, கல்லூரி, தனியார் மண்டபங்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். வருவாய் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் கனமழை பெய்து வருவதால் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மத்திய அரசு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை: கனிமொழி குற்றச்சாட்டு!
’பாதிக்கப்பட்ட மீனவர்களே கழிவை அகற்றுவது மனித தன்மையற்ற செயல்” : கமல்