மூன்று நாட்கள் கழித்து தேசியக்கொடி ஏற்றிய பட்டியலின ஊராட்சிமன்ற தலைவர்: ஏன்?

தமிழகம்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள  ஒரு பள்ளியில் சுதந்திர தின விழாவில் தேசியக்கொடி ஏற்றவிடவில்லை என்று ஊராட்சி மன்றத் தலைவர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து ஊராட்சி மன்ற தலைவரை தேசியக்கொடி ஏற்ற வைத்தார்.

sc st panchayat chief hoist flag discrimination

சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதிய கடிதத்தில்,

“ஒரு சிலர் சாதி பாகுபாடு காரணமாக, கிராம ஊராட்சிகளில் தேசியக்கொடி ஏற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவருகிறது. தீண்டாமை ஒழிக்கப்பட்ட பிறகும், அதனை வேறு வகையில் கையில் எடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, சுதந்திர தின விழாவில் அனைத்து மாவட்டங்களிலும் பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றினர்.

புதுக்கோட்டை மாவட்டம், சேர்ந்தாக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், கடந்த மூன்று ஆண்டுகளாக சுதந்திர தினத்தின் போது, தான் ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் என்பதால்  தேசியக்கொடி ஏற்ற அனுமதிக்கவில்லை என்று சேர்ந்தாக்குடி ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசன், சமூக வலைதளங்களில் வேதனையோடு கருத்து பதிவிட்டிருந்தார்.

இந்த விவகாரம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கவனத்திற்கு சென்ற போது, கவிதா ராமு நேரில் வந்து, கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசனை இன்று (ஆகஸ்ட் 18) தேசியக்கொடியேற்ற வைத்தார்.

அவர் தேசியக்கொடியை ஏற்றிய பின்பு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கூறும் போது, “சுதந்திர தின விழாவில் பெரும்பாலான பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே தேசியக்கொடி ஏற்றுகின்றனர்.

சாதி ரீதியாக ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசனுக்கு கொடியேற்ற அனுமதி மறுக்கப்படவில்லை. அவர் சமூக வலைதளங்களில் இதுகுறித்து கருத்து பதிவிட்டவுடன், நேரில் வந்து அவரது விருப்பத்தை நிறைவேற்றியுள்ளேன்” என்றார்.

வழக்கமாக பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் இந்தப் பள்ளியில் தேசியக்கொடி ஏற்றி வந்த நிலையில், தலைமை செயலாளர் அனுப்பிய கடித்தால் தமக்கு இந்த முறை அழைப்பு விடுக்கப்படும் என்று ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசன் எண்ணியிருந்த நிலையில், சுதந்திர தின விழாவில் அவருக்கு தேசிய கொடி ஏற்ற அழைப்பு விடுக்காததையடுத்து, சமூக வலைதளத்தில் இவ்வாறு வீடியோ பதிவிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

செல்வம்

வீடுகளில் மட்டுமல்ல விண்ணிலும் பறந்த தேசியக்கொடி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.