தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை!

Published On:

| By Monisha

tamilnadu rains for next 4 days

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகரித்து வந்தது. இதனால் மக்கள் மதியம்12 மணியில் இருந்து 3 மணி வரை வெளியே வர வேண்டாம் என்று சுகாதாரத்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில் மார்ச் மாத இறுதியில் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று (மார்ச் 17) அதிகாலை சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

மேலும் மார்ச் 21 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதில், “தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக,

மார்ச் 17 முதல் 20 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மார்ச் 21 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்ஷியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்ஷியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மார்ச் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோனிஷா

மகளிர் காவலர் பொன்விழா: ஸ்டாலின் வெளியிட்ட 9 அறிவிப்புகள்!

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு வழக்கு: உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel