அதிகாலை மழை: மக்கள் மகிழ்ச்சி!

தமிழகம்

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் ஏற்பட்ட நிலையில், மார்ச் மாதம் இறுதியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று (மார்ச் 17) அதிகாலை சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்திருந்தது. மேலும் தொடர்ந்து மார்ச் 21 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று மாலை மற்றும் இன்று (மார்ச் 18) அதிகாலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரையும் இன்று அதிகாலையும் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. குறிப்பாக சில பகுதிகளில் சாலைகளில் நீர் தேங்கும் அளவிற்கு மழை பெய்துள்ளது.

பூவிருந்தவல்லி, ஆவடி, பொன்னேரி, எழும்பூர், சேப்பாக்கம், அண்ணாசாலை, கோடம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் கோடை மழை பெய்தது. செங்கல்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இரவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. இது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தியமங்கலம் தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் விளைநிலங்களில் இருந்த வாழை மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. மேலும் சாலையோரத்தில் இருந்த சில மரங்களும் வேரோடு சாய்ந்துள்ளன.

கொடைக்கானல் பகுதியில் தொடர்ந்து 2வது நாளாக கோடைமழை பெய்தது. இதனால் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இவ்வாறு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழையால் வெப்ப அலையின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 13 மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மோனிஷா

“ரஜினி சிறந்த நடிகர் இல்லை”: அமீர்

இந்தியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட்: டிக்கெட் வாங்க திரண்ட ரசிகர்கள்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *