வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலிலேயே வழுவிழக்க வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று (20-12-2024) மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.
இது, அடுத்த 12 மணி நேரத்தில், வடக்கு திசையில் நகர்ந்து, மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு, இது அதற்கடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு- வடகிழக்கு திசையில் நகரக்கூடும் என்றும் நேற்று சென்னை வானிலை ஆய்வும் மையம் கூறியிருந்தது.
அதுபோன்று வரும் டிசம்பர் 26ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (டிசம்பர் 21) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், “வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையிலிருந்து வடகிழக்கே 450 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து கடலிலேயே வலுவிழக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்” என்று தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா