உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி அதிகாரத்தினை தமிழக அரசு உயர்த்தி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள இன்றைய செய்திக் குறிப்பில், “ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி அதிகாரம் 2007-ஆம் ஆண்டு விதிகளின்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தாமாக பணிகளை தேர்வு செய்து நடைமுறைப்படுத்தும் வகையில் நிதி அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளாட்சிகளில் முறையான மக்களாட்சி மலர்ந்திட வழிவகை செய்யப்பட்டது.
அதன்படி, அப்போது கிராம ஊராட்சிகளுக்கு ரூ.2 லட்சம் வரையிலும், வட்டார ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் வரையிலும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.20 லட்சம் வரையிலுமான பணிகளை உரிய ஊராட்சிகளின் தீர்மானத்தின் மூலம் தாமாகவே தேர்வு செய்து செயல்படுத்திட அதிகாரம் வழங்கப்பட்டது. அதற்குப்பிறகு எந்தவொரு மாற்றமும் இன்றி தற்போது வரை அதே நிதி அதிகாரம் வழங்கும் நடைமுறையே இருந்து வருகிறது.
இவ்வரசு பதவியேற்றவுடன் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை வலிமைப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரத்தினை தற்போது உயர்த்தி வழங்கி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேலும் வலுவூட்டும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் 6.12.2022 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இப்புதிய அரசாணையின்படி, கிராம ஊராட்சிகளுக்கு ரூ.5 லட்சம் வரையிலும், வட்டார ஊராட்சிகளுக்கு ரூ.25 லட்சம் வரையிலும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.50 லட்சம் வரையிலும் பணிகளை தாமாகவே உரிய தீர்மானம் நிறைவேற்றி மேற்கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரப் பரவலாக்கத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்
ஐஸ்வர்யா ராயுடன் காதல்: விவேக் ஓபராயின் விநோத பதில்!
கள்ளக்குறிச்சி மாணவி செல்போன்: காவல்துறையிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!