தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ரவுடிகள் வேட்டையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சமீப நாட்களாக தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதிகரித்திருப்பதாகவும், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, குற்றம்சாட்டி வருகிறார். செங்கல்பட்டு மாவட்டத்தில் பாமக நிர்வாகிகள் அடுத்தடுத்து கொல்லப்பட்டதால் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டார்.
இந்தசூழலில் கடந்த ஜூன் 30ஆம் தேதி புதிதாக பொறுப்பேற்ற டிஜிபி சங்கர் ஜிவால் காவல்துறையினருக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
போலீசாருக்கு ‘தண்ணி’ காட்டி வரும் ரவுடிகள் குறித்த பட்டியலை தயாரித்து அவர்களை உடனடியாக பிடிக்குமாறு உத்தரவு போட்டார். இதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் நாம் விசாரித்த போது,
“2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அப்போதைய தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, உளவுத் துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனையைத் தொடர்ந்து ரவுடிகளை ஒடுக்க தமிழகம் முழுவதும் ரவுடிகள் பட்டியலை போலீசார் எடுத்தனர். ஆனால் ரவுடிகளை அடிக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்தார் அப்போதைய டிஜிபி சைலேந்திர பாபு. வேறு வழியிலாமல் ரவுடிகளிடம் போலீசார் அன்பாக பேசவும் தொடங்கினர். இதனால் பல இடங்களில் ரவுடிசம் தலை தூக்கத் தொடங்கியது. டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவி ஏற்ற பிறகும் இது தொடர்ந்தது.
செங்கல்பட்டு நீதிமன்றம் எதிரில் ஒரு ரவுடியை வெடிகுண்டு வீசி கத்தியால் வெட்டியது, கடலூர் மாநகரில் தாழங்கூட ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சிவன் கோயிலுக்கு சென்று வந்த போது கொடூரமான முறையில் தலையை வெட்டி கொலை செய்தது என நீதிமன்றம் முன்பும், கோயில் முன்பும் கூட கொலை குற்றங்கள் தலை விரித்தாடின.
இந்த சூழலில் தான் புதிய டிஜிபி சங்கர் ஜிவால் பொறுப்பேற்ற பிறகு காவல்துறை ரிவியூ மீட்டிங்கை நடத்தினார் முதல்வர் ஸ்டாலின். இந்த கூட்டத்தில் ரவுடிகளை ஒடுக்க, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க என்ன வழி என்று ஆலோசிக்கப்பட்டது.
அப்போது, ‘குற்றங்கள் அதிகரித்து வருகிறது. எனவே, ரவுடிசத்தை கட்டுப்படுத்த வேண்டும். மக்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்படும் வகையில் பொய்யான செய்தி பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கவலையுடனும் கோபத்துடனும் மீட்டிங்கை முடித்தார் முதல்வர் ஸ்டாலின்.
அதன் பிறகு டிஜிபி சங்கர் ஜிவால் ரவுடிகளை ஒடுக்க, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி, ஐஜிக்கள், உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் ஆகியோருடன் ஆலோசனை செய்தார்.
அனைத்து மாவட்ட எஸ்பி, சிட்டி கமிஷனர், டிஐஜி, ஐஜிக்கள் அனைவருக்கும் அவசர உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
அந்த உத்தரவில் ஒவ்வொரு காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட ஏ+ பிரிவு ரவுடிகள், ஏ பிரிவு ரவுடிகள், பி பிரிவு மற்றும் சி பிரிவு ரவுடிகள் பட்டியலை கேட்டுள்ளார் டிஜிபி.
அடுத்ததாக ஆக்டிவாக இருக்கக்கூடிய ஏ+ மற்றும் ஏ பிரிவு ரவுடிகளை கைது செய்ய வேண்டும். மிக கடுமையான குற்றங்களை செய்பவர்களின் கை கால்களை உடையுங்கள் என்று வாய் வழியாகவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.
இதில் ஏ+ பிரிவு ரவுடிகள் என்றால் கொலை செய்ய திட்டமிடுதல், பண உதவி செய்தல், வாகன உதவி செய்தல், கேங் லீடராக செயல்படுபவர்கள். ஏ பிரிவு என்றால் இரண்டுக்கும் மேலான கொலை வழக்கில் சிக்கியவர்கள். பி பிரிவு என்றால் கொலை முயற்சி , ஆதாய கொலை செய்தவர்கள், சி பிரிவு என்றால் பொது மக்களை அச்சுறுத்துபவர்கள்” என்றனர்.
மேலும் அவர்கள், “டிஜிபி உத்தரவை அமல்படுத்த கடந்த ஜூலை12 ஆம் தேதி இரவு முதல் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஸ்பெஷல் டீம் அமைத்து ரவுடிகளை வேட்டையாடி வருகிறது தமிழ்நாடு போலீஸ்.
ஒவ்வொரு மண்டல ஐஜி, டிஐஜி, எஸ்பிகளை தொடர்புக்கொண்டு, எத்தனை ரவுடிகளை கைது செய்துள்ளீர்கள், ‘குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டோம்’ என எத்தனை ரவுடிகளிடம் உறுதி மொழி பத்திரம் (காவல்துறையில் ஆர்.டி.ஓ பாண்ட் எனப்படும் இந்த உறுதிமொழி பத்திரத்தை மீறி குற்றம் செய்தால் ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த பத்திரத்தை ரவுடிகள் வருடம் வருடம் புதுப்பிக்க வேண்டும்) பெற்றுள்ளீர்கள். எத்தனை பேர் மீது குண்டாஸ் பாய்ந்திருக்கிறது என்று காவல் துறை தலைமை கேட்டு வருகிறது.
கட்டுப்படாத ரவுடிகளை காலை உடைத்து கைது செய்து அரசு மருத்துவமனையில் சேருங்கள் என்றும் உத்தரவு கொடுத்து வருகின்றனர்.
இதனால் கடந்த மூன்று நாட்களாக போலீஸார் ஓய்வு இல்லாமல் ரவுடிகளைத் தேடி வருகின்றனர், போலீஸ் வேட்டை காரணமாக சில ரவுடிகள் இரவோடு இரவாக வெளி மாநிலத்திற்கு தப்பிக்க முயற்சித்தாலும், அந்த முயற்சியையும் போலீசார் முறியடித்து வருகின்றனர்.
வடக்கு மண்டல ஐஜி கண்ணன் உத்தரவின் பேரில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய பத்து மாவட்டங்களில் கடந்த நான்கு நாட்களில் 80 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 86 ரவுடிகளிடம் உறுதி மொழி பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது.
இரண்டு பேர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. 59 ரவுடிகள் மீது 110 சிஆர்பிசி போடப்பட்டுள்ளது, தலைமறைவாக இருக்கும் 18 ரவுடிகளை தேடி வருகின்றனர்.
வடக்கு மண்டலம் போலவே, மத்திய மண்டலம், மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம், சென்னை, ஆவடி, தாம்பரம், திருச்சி, மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி, திருப்பூர் போன்ற இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்துள்ளனர். இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகளிடம் உறுதிமொழி பத்திரம் பெறப்பட்டுள்ளது. இன்று வரையில் ரவுடிகள் கைது வேட்டை தொடர்ந்து வருகிறது” என்கிறார்கள்.
இந்த ஆபரேஷன் தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
வணங்காமுடி
கலைஞருடன் அமர்ந்து பேசிய ஸ்டாலின், துரைமுருகன்
“தமிழகத்தில் கல்வி புரட்சியை ஏற்படுத்தியது திமுக” – முதல்வர் ஸ்டாலின்