மரக்காணம், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தை தொடர்ந்து, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இருந்து தமிழகத்திற்கு கடத்தப்படும் சாராயம் மற்றும் மெத்தனால் போன்ற போதை பொருட்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறது தமிழ்நாடு போலீஸ். இந்த நடவடிக்கைகளில் புதுச்சேரி போலீஸ் உள்ளிட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லை என்ற புகார் தமிழ்நாடு தரப்பில் இருந்து தொடர்ந்து கேட்கிறது.
இதற்கு உதாரணமாக நவம்பர் 23 ஆம் தேதி ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கடலூர்-பண்ருட்டி சாலையில் மேல்பட்டாம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் 23 ஆம் தேதி காலை ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்தார். அவர் கையில் ஒரு பழைய பை இருந்தது. கடலூர் எஸ்.பி. தனிப்பிரிவு போலீஸார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த பெரியவரை பார்த்தனர். அருகே சென்று விசாரித்தனர்.
‘என்ன பெரியவரே… உங்க பேரென்ன?’
‘நடராசன்…’
‘எந்த ஊரு உங்களுக்கு…’
‘பண்ருட்டி…’
‘பையில என்ன வைச்சிருக்கீங்க?’ என்று கேட்டபடியே போலீஸார் பையை ஆய்வு செய்தபோது, 200 மி.லி. சாராய பாக்கெட் 6 வைத்திருந்தார்.
‘எங்கேர்ந்து வாங்கிட்டு வர்றீங்க’ என்று கேட்டபோது,
‘மடுகரையில இருந்து வாங்கிட்டு வந்தேன். விக்கிறதுக்கெல்லாம் இல்லய்யா… எனக்குத்தான் வாங்கிட்டு வந்தேன்…’ என்று சமாளித்திருக்கிறார் அந்த பெரியவர்.
உடனடியாக மேலதிகாரிகளுக்கு இந்த தகவலை அனுப்பினர் தனிப்பிரிவு போலீஸார். அன்று காலை 10.30-க்கு ஒரு எஸ்.ஐ. தலைமையில் நான்கு தமிழக போலீஸார், புதுச்சேரி மடுகரையில் உள்ள அந்த தனியார் சாராயக் கடைக்கு மப்டியில் போனார்கள். அந்த சாராயக் கடை ஓனர் ஆண்டிப்பாளையம் ராஜா கடையில் இல்லை. ஊழியர்கள்தான் இருந்தனர். மப்டியில் வந்தவர்களை பார்த்ததுமே தமிழக போலீஸார்தான் என்று கண்டுபிடித்துவிட்டனர் சாராய கடை ஊழியர்கள்.
‘நீங்க யாரு இங்க ரெய்டு பண்றதுக்கு’ என்று கேட்டு கதவை சாத்திவிட்டனர்.
‘உங்க கடையில இருந்து பாக்கெட் சாராயம் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கு. எஃப்.ஐ.ஆர். போட்டு மேல் விசாரணைக்காக வந்திருக்கோம்….’ என்று தமிழக போலீஸார் சொல்ல..
‘சார்… இதில் நீங்க வரக் கூடாது. புதுச்சேரி போலீஸ் கூட வர முடியாது. இங்க இருக்கிற கலால் போலீஸ்தான் வரமுடியும்’ என்று பேசியபடியே புதுச்சேரி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர் சாராயக் கடை ஊழியர்கள்.
உடனடியாக நெட்டப்பாக்கம் எஸ்.ஐ. வீரபுத்திரன், மடுகரை எஸ்.ஐ. குப்புசாமி இவர்கள் தலைமையில் புதுச்சேரி போலீஸ் டீம் அந்த சாராயக் கடைக்குப் போனது. அவர்கள் தமிழ்நாடு போலீஸாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
‘புதுச்சேரி சாராயக் கடை கலால் சட்டப்படி ஒரு ஆள் நாலரை லிட்டர் சாராயம் வாங்கிட்டுப் போகலாம். அந்த அடிப்படையில இந்த கடைக்கு வந்துட்டு வாங்கிட்டுப் போயிருக்கலாம். அதுக்கு அதிகமாக வித்தாலும் புதுச்சேரி கலால் தாசில்தார்தான் கேஸ் போடமுடியும். அதனால் உங்களுக்கு இங்க வேலை இல்லை’ என்று கூறினார்கள்.
அதற்கு தமிழ்நாடு போலீசார், ‘புதுச்சேரி கடைகளில் சாராயம் விற்கலாம். ஆனால் பாக்கெட்டில் அடைத்து விற்க உங்கள் சட்டத்திலேயே இடமில்லை. அந்த பாக்கெட்தான் தமிழ்நாட்டுக்கு வருது. அதனால நாங்க நடவடிக்கை எடுப்போம்’ என்றனர்.
இரு தரப்புக்கும் இடையே விவாதம் தொடரந்தது. ஒருகட்டத்தில் கடலூர் எஸ்.பி. ராஜாராமுக்கு இந்தத் தகவல் தெரியப்படுத்தப்பட, அவர் புதுச்சேரி போலீஸ் உயரதிகாரிகளிடம் பேசினார்.
‘நாங்க எஃப்.ஐ.ஆர். போட்டிருக்கோம். நீங்க கோ ஆபரேட் பண்ணுங்க’ என்று எஸ்பி. கேட்டார்.
இதையடுத்து, 200 மி.லி. அளவு கொண்ட 250 சாராய பாக்கெட்டுகளையும், பாக்கெட் போடும் இரு மெஷின்களையும் தமிழ்நாடு போலீஸ் அந்த சாராய கடையில் இருந்து கைப்பற்றியது.
கடையில் இருந்த ஊழியர்கள் ஹரி, ராம்குமார் ஆகியோர் இரு மாநில போலீஸாருக்கு இடையே நடந்த வாக்கு வாதத்துக்கு இடையே தப்பித்துப் போய்விட்டனர்.
தமிழ்நாடு போலீஸார் 250 சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றிக் கொண்டு நெல்லிக்குப்பம் காவல்நிலையத்துக்கு திரும்பி, விசாரணையைத் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
‘புதுச்சேரியில் இருந்து சாராயமோ, மெத்தனாலோ தமிழ்நாட்டுக்குள் வந்துவிடக் கூடாது என்பதில் தீவிர கண்காணிப்பில் இருக்கிறது தமிழக போலீஸார். ஆனால், இதற்கு புதுச்சேரி போலீஸார் முழு ஒத்துழைப்பு தருவதில்லை என்ற புகார் தமிழக போலீஸ் தரப்பில் இருந்து கேட்கிறது.
இதுகுறித்து புதுச்சேரி கலால் அதிகாரிகளிடம் விசாரித்தபோது,
“புதுச்சேரி மாநிலத்தில் 88 சாராயக் கடைகள் உள்ளன. இதைத் தவிர மேலும் கள்ளுக் கடைகளும், ஒயின் ஷாப்புகளும் இருக்கின்றன. 88 சாராயக் கடைகளில் ஒரு மாதத்துக்கு 3 லட்சம் முதல் 30 லட்சம் வரை அரசுக்கு பணம் கட்டும் கடைகள். தமிழக எல்லையோரத்தில் இருக்கும் சாராயக் கடைகள்தான் அதிக விலைக்கு டெண்டர் போகும்.
உதாரணத்துக்கு கடலூர்-புதுச்சேரி இடையே தென்பெண்ணையாறு இருக்கிறது. அந்த ஆற்றுப் பகுதிக்குள் பட்டா இடம் இருக்கிறது. அந்த பட்டா இடத்தில் புதுச்சேரி சாராயக் கடை இருக்கிறது. அந்த கடைக்கு தமிழ்நாட்டு மக்கள் வந்து செல்ல சாலை வசதியும் செய்து வைத்திருக்கிறார். லைசென்ஸ் உள்ள ஒரு கடை வைத்திருந்தாலும்… லைசென்ஸ் இல்லாத கிளைக் கடையும் நடக்கிறது. இந்த கடையில் இருந்து மட்டும் புதுச்சேரி அரசுக்கு மாதம் 25 லட்சம் ரூபாய் போகிறது.
ஒரு மாதத்துக்கு 30 ஆயிரம் லிட்டர் சாராயம் கொள்முதல் செய்கிறார்கள். ஒரு லிட்டர் 61 ரூபாய் புதுச்சேரி அரசிடம் வாங்கி, ஒரு லிட்டர் 200 ரூபாய் வரைக்கும் விற்கிறார்கள். அதுவும் அரசிடம் வாங்கும் சரக்கில் பத்து லிட்டருக்கு ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து விற்கிறார்கள். இதில் 95% தமிழ்நாட்டு மக்கள்தான் குடிக்கிறார்கள்.
மடுகரை கடையும் இதேபோலத்தான் தமிழ்நாட்டில் இருக்கும் கடலூர் மக்களை நம்பிதான் இருக்கிறது.
புதுச்சேரி அரசிடம் இருந்து வாங்கும் சாராயத்தை தமிழ்நாட்டுக்குள் கொண்டு சென்றும் விற்கிறார்கள்.
புதுச்சேரி கலால் துறை டார்கெட் வைத்து சாராய விற்பனை செய்கிறது. அதனால் அங்கே விற்பது கொஞ்சம் என்றால்… தமிழ்நாட்டுக்குள் சென்று விற்பனை செய்வதே அதிகம். இதைத் தடுக்க வேண்டுமானால் கீழ் நிலை அதிகாரிகள் நினைத்தால் முடியாது.
தமிழ்நாடு, புதுச்சேரி இரு அரசுகள் சார்பிலும் உயர் அதிகாரிகள் அல்லது அரசியல் தலைமைகள் சந்தித்துப் பேசி தீர்வு காண வேண்டும். இல்லையென்றால், சாதாரண மக்கள்தான் தொடர்ந்து பாதிக்கப்படுவார்கள்” என்கிறார்கள்.
–வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…