நாட்டின் ஒட்டுமொத்த தனிநபர் சராசரி வருமானத்தை (ரூ.98,374) விட தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் (ரூ.1,66,727) அதிகமாக உள்ளதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பொருளாதாரம் கடந்த இரண்டு ஆண்டுகளாக எப்படி வளர்ந்துள்ளது என்பது குறித்தான அந்த புள்ளி விவரம் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை தயாரித்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக சென்னையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் ஆகியோர் கூட்டாக இன்று (ஆகஸ்ட் 28) செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
விலைவாசி குறைவு!
அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
“விலைவாசி உயர்வை எடுத்துக் கொண்டால், நாட்டின் பிற பகுதிகளை விட தமிழகத்தில் குறைவாக இருக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, 2021-22ல் இங்கு பணவீக்கம் 7.92 சதவீதமாகவும், 2022-23ல் 5.97 சதவீதமாகவும் உள்ளது. அதே வேளையில் ஒன்றிய அரசின் பணவீக்கம், 2021-22ல் 9.31 ஆகவும், 2022-23ல் 8.82 ஆகவும் இருக்கிறது.
கொரோனா காலத்தில்கூட இந்தியாவில் வளர்ச்சி விகிதம் மைனஸாக இருந்தபோதும் தமிழ்நாட்டில் வளர்ச்சி அதிகரித்து இருந்தது. பணவீக்க விகிதாச்சாரத்தை எடுத்துக் கொண்டால், இந்திய ஒன்றிய அளவைவிட தமிழ்நாடு குறைவாக தான் உள்ளது.
நாட்டின் 2வது மிகப்பெரிய பொருளாதாரம்!
‘2022-23ல் தமிழ்நாட்டின் உற்பத்தி மதிப்பு நிலைத்த விலையில் 20.71 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. நடப்பு விலையில் தமிழ்நாட்டின் உற்பத்தி மதிப்பு ரூபாய் 23,64,514 கோடியாக உள்ளது. இந்திய உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.1 சதவீதமாக உள்ளது.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நிலைத்த விலையில் 2021-22 ல் 7.92 சதவீதமாகவும் 202-23ல் 8,19 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.. நடப்பு விலையில் 2021-22ல் தமிழ்நாட்டின் உற்பத்தி வளர்ச்சி விகிதம் 15.84 சதவிகிதமாகவும், 2022-23ல் 14.16 சதவீதமாகவும் உள்ளது.
2022-23ம் ஆண்டில் தமிழ்நாட்டின் உற்பத்தி மதிப்பு நிலைத்த விலையில் 20 லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. 2022-23ம் ஆண்டுக்கான நடப்பு விலையில் தமிழ்நாட்டின் உற்பத்தி மதிப்பு 23 லட்சத்து 64 ஆயிரத்து 514 கோடி ரூபாயாக உள்ளது.
தமிழ்நாட்டின் பொருளாதாரம் 8.19 சதவீதமாக உள்ளது. நாட்டின் 2வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது.
தனிநபர் வருமானம் உயர்வு!
2021-22ல் தமிழகத்தில் தனிநபர் சராசரி வருமானம் 1 லட்சத்து 54 ஆயிரத்து 557 ரூபாயாக இருந்தது. 2022-23ல் 1 லட்சத்து 66 ஆயிரத்து 727 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
ஒட்டுமொத்த நாட்டின் தனிநபர் வருமானம், 2021-22ல் 92 ஆயிரத்து 583 ரூபாயாகவும், 2022-23ல் 98 ஆயிரத்து 374 ஆக உள்ளது.
இதன்மூலம் இந்தியாவில் தனிநபர் சராசரி வருமானத்தை (ரூ.98,374) விட தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் (ரூ.1,66,727) அதிகமாக உள்ளது.
உற்பத்தி மற்றும் கால்நடை துறை!
தமிழ்நாட்டில் கால்நடை துறை சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளது. வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளின் பங்கு மொத்த உற்பத்தியில் 12.18, மற்றும் 11.73 சதவீதமாக உள்ளன.
உற்பத்தி துறையின் பங்களிப்பு 36.9 சதவீதத்தில் இருந்து 37.4 சதவீதமாக அதிகரித்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக சராசரியாக எட்டு சதவீத வளர்ச்சியைத் தமிழ்நாடு சந்தித்து வருகிறது. தமிழகம் மின்னணு ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கிறது.
தொடர்ந்து நிலையான வளர்ச்சி
2011-12 நிதியாண்டு முதல் 2017-18 நிதியாண்டு வரை, ஒட்டுமொத்த மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது சமச்சீராக இல்லாமல், ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
2018க்குப் பிறகு கோவிட் பெருந்தொற்று வந்தபிறகு, பொருளாதார வளர்ச்சியில் ஒரு பெரிய சரிவு வந்தது. ஆனால், பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு ஒட்டுமொத்த வளர்ச்சி எதிர்மறையாக இருந்தபோதும், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த சரிவில் இருந்து மீண்டும் கிட்டத்தட்ட 8 சதவீதம் என்ற நிலையான அளவில் தமிழகத்தின் பொருளாதாரம் வளர்ந்துகொண்டு வருகிறது.
அதன்பிறகு தமிழகத்தின் பொருளாதார நிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கு காரணம், முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நடந்துள்ள திராவிட மாடல் அரசின் திட்டங்கள், அவர் வகுத்துள்ள பொருளாதார நோக்கங்கள், மாநில திட்டக் குழுவின் ஆலோசனைகள் மற்றும் நடவடிக்கைகள். ஏறத்தாழ இரண்டரை லட்சம் கோடி அளவுக்கு தற்போது தமிழ்நாடு தொழில் முதலீடுகள் வந்திருக்கிறது என்றால், இதற்கு அடிப்படையான காரணம் முதல்வர்தான்” என்று தங்கம் தென்னரசு கூறினார்.
கிறிஸ்டோபர் ஜெமா