ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் இதுவரை தமிழகத்தை சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு இன்று (ஜூன் 3) ஒடிசாவிற்கு சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்தும் ஒருவர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“இதுவரை அடையாளம் காணப்பட்ட சடலங்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் யாருமில்லை. சென்னையில் இருந்து இன்று மாலை தெற்கு ரயில்வே சிறப்பு ரயிலை இயக்குகிறது. அதில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்கள் ஒடிசாவிற்கு வர உள்ளனர்.
விபத்து நடைபெற்ற பாலசோரில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்களா என்றும் அவர்களோடு தொடர்புகொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் எங்கள் குழு ஆய்வு செய்து வருகிறது.
பயணிகளின் பட்டியலை வைத்து மட்டும் யார் எங்கிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் இங்கு உள்ளார்கள், பாதிக்கப்படாத நிலையில் தமிழகத்திற்கு பயணம் செய்பவர்கள் எத்தனை பேர் என்பதை கண்டறிய முயற்சி செய்து வருகிறோம்.
எனினும் இதுவரை உயிரிழந்தவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் கண்டறியப்படவில்லை. தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
மோனிஷா
ரயில் விபத்தில் சிக்கிய ஆந்திர பயணிகள்: உத்தரவிட்ட முதல்வர்!
ஒடிசா விபத்து: கவாச் சிஸ்டம் என்னாச்சு?