தமிழகம், புதுவையில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்!

தமிழகம்

2022 ஆம் ஆண்டு முடிந்து 2023 ஆம் ஆண்டு இன்று (ஜனவரி 1) உற்சாகமாக பிறந்தது. உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது.

இதனிடையே, தமிழகத்தில் கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் ஆங்கில புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனைகள் நடைபெற்றன. கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபாடு செய்தனர்.

தமிழகம் முழுவதும் ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள் மற்றும் பொது இடங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது. கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்களை தவிர்க்க சென்னை காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

சென்னை

புத்தாண்டுப் பிறப்பைக் கொண்டாட நேற்று இரவு 10 மணி முதலே சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் குவியத் தொடங்கினர். ஆங்காங்கே தங்கள் நண்பர்களுடன் குழுக்களாக ஒன்றிணைந்து கேக் வெட்டுவது, பட்டாசு வெடிப்பது, ஆட்டம், பாட்டம் என மகிழ்ச்சியாக இருந்தனர்.

tamilnadu new year celebration

கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள சொகுசு விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்களில் நடன நிகழ்ச்சி களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற இளைஞர்கள் நடனம் ஆடியும், பாட்டு பாடியும் புத்தாண்டை மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர்.

காஞ்சிபுரம்

புத்தாண்டை ஒட்டி நேற்று மாலை 6 மணி முதல் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து காவல் பணியில் ஈடுபட்டனர்.

tamilnadu new year celebration

இந்நிலையில் சரியாக 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததை ஒட்டி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பொதுமக்கள், சாலை வழியாக வந்த மக்கள் மற்றும் பேருந்து ஓட்டுனர், ஆட்டோ ஓட்டுநர்கள்,வெளிநாட்டு பயணிகள் என அனைவருடன் இணைந்து சாலையில் கேக் வெட்டி , அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகர் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

வேலூர்

புதிய ஆண்டை வரவேற்கும் விதத்தில் வேலூர் பழைய பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகே பொதுமக்களுடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் கேக் வெட்டி பொதுமக்களுக்கு கொடுத்து புதிய ஆண்டின் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

புதுச்சேரி

புத்தாண்டு பிறப்பு புதுச்சேரியில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெற்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில், சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கடற்கரை சாலையில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு காரைக்கால் கடற்கரை பகுதியில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இதில் தமிழக பகுதிகளான நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து இந்த கலை நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

வேளாங்கண்ணி

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் புத்தாண்டு தின நள்ளிரவு பிரார்த்தனை ஆலய வளாகத்தில் உள்ள சேவியர் திடலில் நடைபெற்றது . 2022 ம் ஆண்டிற்கு நன்றி தெரிவித்து வழியனுப்பும் விதமாக,இரவு 10.45 மணியில் இருந்து 11.45 மணிவரை பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் மறையுரையும்,2023 ம் ஆண்டை வரவேற்கும் விதமாக இரவு 11.45 மணிக்கு,தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் 10 க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்ற சிறப்பு பாடல் திருப்பலி நடைபெற்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. புத்தாண்டை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நேற்று இரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தூத்துக்குடியில் 440 ஆண்டுகள் பழமை வாய்ந்த பனிமயமாதா பேராலயத்தில் பங்குதந்தை குமாரராஜா தலைமையில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

2023 புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து!

புத்தாண்டு கொண்டாட்டம்: டெல்லி, ஹரியானாவை அதிரவைத்த நிலநடுக்கம்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0