நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு வந்த பிறகு பல எம்.பி.க்களும் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வந்த பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த பல எம்.பி.க்களும் உடல்சோர்வு, உடல்வலி, இருமல், காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விசிக தலைவர் திருமாவளவன் சிறப்புக் கூட்டத்தொடரை தொடர்ந்து அரியலூர், தஞ்சாவூர் என பல்வேறு ஊர்களுக்கு சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
நேற்று முன்தினம் சென்னையில் காங்கிரஸ் ஓபிசி பிரிவு சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இந்நிலையில் காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திருமாவளவன் சிகிச்சை பெற்று வருகிறார்.
திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசாவும் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடல் வலி, இருமல் உள்ளிட்ட பாதிப்பு இருப்பதாக திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசும் போதே ஆ.ராசா, “தனக்கு தொண்டை வலி இருக்கிறது. அதனால் பேச வேண்டாம் என்று நினைத்திருந்தேன்.
ஆனால் முக்கியமான விவகாரம் என்பதால் பேசுகிறேன்” என்று சந்திரயான் 3 குறித்தான விவாதத்தின் போது கூறியிருந்தார். இந்நிலையில் கடுமையான காய்ச்சலால் தற்போது ஓய்வெடுத்து வருகிறார்.
திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழியும் காய்ச்சல் காரணமாக ஓய்வெடுத்து வருகிறார்.
தென் சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனுக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த இரண்டாவது நாள் செப்டம்பர் 23ஆம் தேதி, சென்னையில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் மாஸ்க் அணிந்து கலந்துகொண்டிருந்தார்.
மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன், வேலூர் எம்.பி கதிர் ஆனந்த், திருநெல்வேலி எம்.பி ஞானதிரவியம், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ஆகியோரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் எம்.பி. ஜோதிமணி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்ததாகவும், தற்போது ஓய்வில் இருப்பதாகவும் காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடல்வலி, இருமல், காய்ச்சல் என பல எம்.பி.க்களும் பாதிக்கப்பட்டிருப்பதால் தங்களது நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளனர்.
அதோடு, எம்.பி.க்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்புகொண்டு எப்படி இருக்கிறீர்கள் என உடல்நிலை குறித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போதே பலருக்கு இடுப்பு வலியும் ஏற்பட்டிருக்கிறது. பழைய நாடாளுமன்ற கட்டிடத்தை காட்டிலும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் காற்றோட்டமாகவும், கூடுதல் இட வசதியுடன் இருக்கைகளும் அமைக்கப்பட்டிருப்பதாக ஆளும் தரப்பு தெரிவித்தது.
ஆனால் போதிய இட வசதி இல்லாமல் இருக்கைகள் இருப்பதாகவும், அதனால் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட போதே இடுப்பு வலி ஏற்பட்டதாகவும் எம்.பி.க்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்தசூழலில் பலரும் காய்ச்சல் காரணமாக ஓய்வில் இருக்கின்றனர்.
பிரியா
செவ்வாய் கிரகம் வரை செல்லும் AI…. நாசாவின் புதிய அறிவிப்பு!
”இருக்கப்போவது கொஞ்ச காலம்… ஏன் இப்படி?”: நித்யா மேனன் வேதனை!
இடுப்பு வலியா?