அமைச்சரவை கூட்டத்தில் தனியார் நிறுவனங்களுக்குத் தொகுப்பு சலுகைகள் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, புதிய முதலீடுகளை தமிழ்நாட்டில் உருவாக்க நிறுவனங்களுக்கு தொகுப்பு சலுகைகளை வழங்குவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ரூ.7108 கோடி மதிப்பீட்டில் 22,536 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய திட்டங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்கள், காலணி உற்பத்தி, மின்வேலி மற்றும் பாதுகாப்பு பொருட்கள், கண்ணாடி பொருட்கள், ஆராய்ச்சி மேம்பாடு தொழில்களில் நிறுவனங்கள் முதலீடு செய்ய உள்ளனர்.
தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டு கொள்கை 2023 அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. தனியார் முதலீட்டை ஈர்க்கும் வகையில் துறைமுக மேம்பாட்டு கொள்கை உருவாக்க வேண்டியது அவசியமாக உள்ளது. கப்பல் மறுசுழற்சி உருவாக்குதல், மிதவை கலங்கள் கட்டுதல், துறைமுகங்களை வணிக ரீதியாக சாத்தியமாக்குதல் வியாபாரமாக்குவதற்காக இந்த கொள்கையை உருவாக்கியிருக்கிறோம். நீர் விளையாட்டுகள், பசுமை துறைமுக திட்டங்களை உள்ளடக்கி இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி, சேலம் மாவட்ட செய்தியாளர் சங்க உறுப்பினர் பத்திரிகையாளர்களுக்கு நிலம் வழங்குவது தொடர்பாக ஒப்புதல் தரப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செல்வம்
2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் இலக்கு: ஸ்டாலின்
மாநிலங்களை ஒழிக்க வேண்டும் என்பதே பாஜக நோக்கம்: முதல்வர்