தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நாளை (மே 7) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்தது.
இந்தநிலையில் தென் கிழக்கு வங்ககடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் இது மே 9-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து பின்னர் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை தென்மேற்கு வங்ககடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இதனால் இந்த பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செல்வம்