தமிழகத்தில் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கியது. கடந்த டிசம்பர் 3,4 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் தாக்கத்தால் கடுமையான சேதம் ஏற்பட்டது. அதேபோல, டிசம்பர் 17,18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழையால் வெள்ளச்சேதம் ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டனர்,
இந்தநிலையில், வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு பகுதிகளில் இருந்து இன்றுடன் (ஜனவரி 14) விலகியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஜனவரி 14 முதல் 17 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
ஜனவரி 18 முதல் 20 வரை தென் தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
ஜனவரி 14-ஆம் தேதி வடமேற்கு பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்”, என தெரிவித்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எல்லா புகழும் உங்களுக்கே… ஆளுயர மாலையுடன் சென்ற அயலான் இயக்குநர்!