தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று (அக்டோபர் 17) தொடங்குகிறது. கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில், மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது. அத்துடன் இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து, இந்த மழைக்கால கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்காக, சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடர் 3 நாட்களுக்கு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத் தொடரில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசனின் அறிக்கை,
ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பான ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதாரின் விசாரணை அறிக்கை ஆகியவை தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
மேலும், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களும் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளன.
குறிப்பாக, எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில், சபாநாயகர் மு.அப்பாவு என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது இன்று தெரிந்துவிடும்.
அ.தி.மு.க.வில் உள்கட்சி பூசல் வெடித்துள்ள நிலையில், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமித்துள்ளார்.
எனவே, அவருக்கே இருக்கை ஒதுக்க வேண்டும் என்று அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும், இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், இப்போது எதுவும் முடிவு எடுக்கக்கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் வலியுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
தீவு போல் காட்சியளிக்கும் அந்தியூர்: பள்ளிகளுக்கு விடுமுறை!
காங்கிரஸ் தேர்தல்: வாக்களிப்பது எப்படி?