தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா என்பவர் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், தற்போது பாலாறு வழியாக செல்லும் தமிழக – கர்நாடக எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் பாலாறு வனப்பகுதி இருக்கிறது. இங்கு காவிரியுடன், பாலாறு இணைகிறது.
இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் யானைகளும், மான்களும் அதிக அளவில் உள்ளன. இதனால் அந்த பகுதியில் உள்ள மலை கிராமங்களைச் சேர்ந்த சிலர் பாலாற்றை பரிசலில் கடந்து சென்று, கர்நாடக வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 14 ம் தேதி இரவு தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவி, இளைய பெருமாள், ராஜா ஆகிய மூவரும் கர்நாடக மாநில எல்லை பகுதியில் மான்களை வேட்டையாட பாலாறு ஆற்றங்கரையோரம் இரண்டு பரிசலில் நாட்டு துப்பாக்கியுடன் சென்றுள்ளனர்.
அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் மூவரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இதில், ரவி, இளையபெருமாள் பரிசல் மூலம் தப்பி தமிழக எல்லையில் உள்ள மேட்டூர் பகுதி கிராமத்திற்கு வந்துவிட்டனர். ஆனால், கோவிந்தபாடியை சேர்ந்த காரவடையான் என்கிற ராஜாவை காணவில்லை.
கடந்த இரு நாட்களாக கர்நாடக போலீசார் தேடி வந்த நிலையில், பாலாற்றாங்கரையில் இன்று ராஜாவின் உடல் உப்பிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் பொதுமக்கள் குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மீன் வேட்டைக்குச் சென்ற தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு நடத்தியதில் செட்டிபட்டியைச் சேர்ந்த பழனி என்பவர் பலியானார்.
அப்போது, வெகுண்டெழுந்த கிராமமக்கள் பாலாற்றில் அமைக்கப்பட்டிருந்த கர்நாடக வனத்துறை அலுவலகத்தை அடித்து நொறுக்கி தீயிட்டு கொளுத்தினர்.
மீண்டும் அது போன்ற சம்பவம் அங்கு நடந்துவிடக்கூடாது என்பதற்காக பாலாறு வழியாக தமிழக – கர்நாடக எல்லையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பாலாறு பகுதி வழியிலான இரு மாநில எல்லை போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது கர்நாடக போலீசார் – பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழ்நாடு காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இன்னும் பிரதே பரிசோதனை அறிக்கை வெளிவராத நிலையில் அதன்பிறகே ராஜா உயிரிழந்தது எப்படி என்பது குறித்து உண்மையான நிலவரம் தெரியவரும்.
கிறிஸ்டோபர் ஜெமா
சென்னையில் கரும்பு விவசாயிகள் கைது!
தடா பெரியசாமி வீடு தாக்குதல் வழக்கு: திருமாவளவனின் பெயர் சேர்ப்பு ?
ட்விட்டர் இந்தியா நிறுவனங்களை மூடிய எலான் மஸ்க்: ஊழியர்கள் அதிர்ச்சி!
வெளியூர் பேருந்துகள் தாம்பரம் வழியாக கோயம்பேடு வர உத்தரவு!