தமிழகம் முழுவதும் 50ஆயிரம் இடங்களில், இன்று (செப்டம்பர் 18) மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னை தி.நகரில் மெகா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக சென்னையிலும், கோவையிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
அடுத்த வாரம் செப்டம்பர் 25-ஆம் தேதியோடு தடுப்பூசி மெகா முகாம்கள் நிறைவு பெற உள்ளது. இதனால் அனைவரும் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
![tamilnadu health minister says](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/Screenshot-2022-09-18-104706.jpg)
தமிழகத்தில், ஒட்டு மொத்தமாக இன்புளுயன்சா காய்ச்சல் என்பது, நேற்றைக்கு 900-க்கு மேல் இருந்தது. தற்போது 1,044 பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல் உள்ளது. இந்த காய்ச்சலைப் பொறுத்தவரை, பீதி ஏற்படுத்தக்கூடிய ஒன்று அல்ல. வழக்கமாக இது போன்ற பருவ நிலைகளில் வருகிற காய்ச்சல் தான்.
காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். தும்மல், இருமல் வரும்போதும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கைக்குட்டை பயன்படுத்த வேண்டும்.
குழந்தைகளுக்குக் காய்ச்சல் வந்தவுடன் பெற்றோர்கள் அவர்களைப் பள்ளிக்கு அனுப்புவதைத் தவிர்க்கலாம். காய்ச்சல் குணமடைந்தவுடன் பள்ளிக்கு அனுப்பலாம்.
![tamilnadu health minister says](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/Screenshot-2022-09-18-100027.png)
காய்ச்சல் காரணமாக ஒட்டுமொத்தமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கச் சொல்லியிருக்கிறார்.
அதற்கான அவசியம் தற்போது இல்லை. காய்ச்சல் இந்த பருவ நிலையில் வருவதுதான், இதற்கெல்லாம் விடுமுறை அளித்தால் மாணவர்களை 365 நாட்கள் வீட்டில் இருக்க சொல்வது போல் ஆகிவிடும்.
தலைவர்கள் அறிக்கை விடும்போது, நோயின் தீவிரம் குறித்தும், தன்மை குறித்தும் அறிந்து மக்களை பதட்டம் அடைய விடாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்என்று அவர் தெரிவித்தார்.
செல்வம்