இனிமேல் ஆன்லைனில் கட்டிட அனுமதி: வந்தாச்சு புதிய திட்டம்!

தமிழகம்

தமிழ்நாட்டில் முதல் முறையாக அதிகபட்சம் 2,500 சதுர அடி பரப்பளவு கொண்ட மனையில் 3,500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு பொதுமக்கள் சுயசான்றிதழ் வழங்கி வீடு கட்டும் கட்டிட அனுமதியை இணையதளம் வாயிலாக பெறும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 22) தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“2024-2025ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், சுயசான்றிதழ் மூலமாகப் பொதுமக்கள் கட்டிட அனுமதி பெறுவதற்குப் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 2,500 சதுர அடி வரையுள்ள மனையிடத்தில், 3,500 சதுர அடி கட்டிடப் பரப்பளவிற்குள் தரைத்தளம் அல்லது தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட 7 மீட்டர் உயரத்திற்குட்பட்டு குடியிருப்புக் கட்டிடத்தைக் கட்டுவதற்கு விரும்பும் பொதுமக்கள் சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டிட அனுமதியை எளிதாகவும் உடனடியாகவும் பெற முடியும்.

சுயசான்றிதழ் திட்டம் என்பது, பொதுமக்கள் கட்டிட அனுமதிக்காக அலுவலகங்களுக்குச் சென்றுவரும் நேரத்தை முழுமையாக தவிர்த்து, அதிகபட்ச வெளிப்படைத் தன்மையுடனும், நடைமுறையில் உள்ள கட்டிட விதிகளை கடைப்பிடிப்பதற்கு எளிமைப்படுத்தியும் மக்கள் மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும்.

தற்போதுள்ள ஒற்றைச் சாளர முறையின் மூலம் ஒப்புதல் பெறுவதைக் காட்டிலும், இந்தச் சுயசான்றிதழ் திட்டத்தில் ஒப்புதல் பெறும் நடைமுறை மிகவும் எளிதான வகையில் அமைந்து பொதுமக்களுக்குப் பெரிதும் பயனளிக்கும். இது தொடர்பாக, ஒற்றைச் சாளர முறையில் சுயசான்றிதழ்  திட்டத்திற்கான மென்பொருள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

தொகுப்பு உருவாக்கப்பட்டு, தற்போது, குடியிருப்புக் கட்டிடங்களுக்கான கட்டிட அனுமதி பெறுவதற்காகப் பெறப்படும் மொத்த விண்ணப்பங்களில் 72 விழுக்காடு ஊராட்சிகளிடமிருந்தும், 77 விழுக்காடு பேரூராட்சிகளிடமிருந்தும், 79 விழுக்காடு நகராட்சி மற்றும் மாநகராட்சிகளிடமிருந்தும் பெறப்படுகிறது.

அவ்விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் ஒற்றைச் சாளர முறையில் பரிசீலனை செய்யப்படுகின்றன.

பொதுமக்கள் பயன்பெறும் வகையில், இப்புதிய திட்டத்தின் கீழ் அனுமதி பெறும் கட்டிடங்களுக்கும் சாலைக்கும் இடையில், தளர்வு (1.5 மீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது),

கூராய்வுக்கட்டணம் (scrutiny fee) (சதுர மீட்டருக்கு ரூ.2), உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுக்கான (I & A) கட்டணங்கள் (சதுர மீட்டருக்கு ரூ.375) ஆகியவற்றில் விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் தேவையான கட்டணங்களைச் செலுத்தியபின் விரைவுத் துலங்கல் (QR) குறியீட்டுடன் கட்டிட அனுமதி மற்றும் வரைபடங்களை உடனடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், முன் இடக்கள ஆய்வு மேற்கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, உடனடியாகக் கட்டுமானப் பணி மேற்கொள்வதற்கும் வழிவகை செய்து கட்டிட முடிவுச் சான்று பெறுவதிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற onlineppa.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி,  இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சிபிசிஐடி கஸ்டடி: கோர்ட் உத்தரவு!

தொழில் துறையில் 9.5% வளர்ச்சி: நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *