வெப்ப அலை தாக்கத்தை மாநில பேரிடராக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கோடைக்காலத்தில் வெப்ப அலைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெப்ப அலையின் தாக்கம் குறித்து இந்திய வானிலை மையம் தொடர்ந்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி வருகிறது.
வெப்ப அலையை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கடும் வெப்ப அலையால் ஏற்படும் நீரிழப்பு, வாதம் உள்ளிட்ட பிரச்சனைகளால் மரணங்கள் ஏற்படுகிறது.
அதன்படி, கடந்த 2013 முதல் 2022 வரையிலான 10 ஆண்டுகளில் வெப்ப அலை தாக்கத்தால் 10,635 பேர் உயிரிழந்ததாக மத்திய இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், கடந்த ஜூன் மாதம் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், மாநில பேரிடர் நிவாரண நிதி விதிமுறைகளின் படி, வெப்ப அலை பாதிப்பிற்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவும், உரிய நிவாரணம் வழங்கவும் வெப்ப அலை தாக்கத்தை மாநில பேரிடராக அறிவிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில், வெப்ப அலை பாதிப்பை மாநில பேரிடராக அறிவித்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதன்படி, வெப்ப அலையால் ஏற்படும் மரணங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலைகளின் பாதிப்பு ஏற்படும் போது தண்ணீர் பந்தல்கள் அமைத்து பல இடங்களில் குடிநீர் வழங்க பேரிடர் நிவாரண நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கையை பாராட்டியுள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், “எங்களது நீண்ட நாட்கள் கோரிக்கை நிறைவேறியது. வெப்ப அலைத் தாக்கத்தை மாநிலப் பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு.
இனி பிற பேரிடர்களைப் போல மாநில பேரிடர் நிதியை வெப்ப அலை பாதிப்பிற்கும் பயன்படுத்த முடியும். அடுத்ததாக “வெப்ப குறியீட்டை” (Heat index or Thermal Discomfort) ஐ நோயாக அறிவிக்க வேண்டும்” என்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
14 மாதங்களுக்கு பிறகு…. கடற்கரை – வேளச்சேரி ரயில் சேவை இயக்கம்!
’நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா..?’ – நயன்தாரா விளக்கம்