ஊக்கத்தொகையுடன் யுபிஎஸ்சி தேர்வு பயிற்சி: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழகம்

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுக்கு தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில் இலவச பயிற்சி விரும்புவர்கள் இன்று (ஜூன் 15) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம் கடந்த 56 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

இங்கு அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை (யுபிஎஸ்சி) எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, மாதிரி ஆளுமைத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த மாதம் 28ஆம் தேதி நடைபெற்ற யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று தேர்வு எழுதியவர்களில் 31 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இவர்களில் ஏழு பெண் ஆர்வலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு ஜுன் முதல் செப்டம்பர் வரை மூன்று மாதங்களுக்கு முதன்மைத் தேர்வு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற ஆர்வலர்கள் மட்டுமன்றி, யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்தைச் சார்ந்தவர்கள் அனைவருமே பயிற்சி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சேர விரும்பும் ஆர்வலர்கள் இன்று காலை 10 மணி முதல்17ஆம் தேதி மாலை 6 மணி வரையில் www.civilservicecoaching.com என்ற இணையத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இணையத்தில் பதிவுசெய்யும் போது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி, வருமானச் சான்றிதழ் விண்ணப்பித்தமைக்கான இணைய ரசீதை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

அதனைத்தொடர்ந்து இட ஒதுக்கீட்டின்படி தெரிவு செய்யப்பட்ட ஆர்வலர்கள் விவரம் வரும் 18ஆம் தேதி மாலை 06.00 மணியளவில் இணையத்தில் வெளியிடப்படும்.

பின்னர் 19 மற்றும் 20 ஆகிய இரு நாட்களில் சேர்க்கை நடைபெறுவதோடு 21ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில் தமிழ்நாடு அரசு விதிகளுக்குட்பட்டுப் பதிவு செய்தவர்களில். 225 ஆர்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

அவர்கள் பயிற்சி பெறக்கூடிய மூன்று மாத காலத்திற்கும் மாதந்தோறும் ஊக்கத் தொகையாக ரூ.3000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

செந்தில் பாலாஜி கைது: கலங்கிய பிடிஆர்!

ஆனந்த் மஹிந்திராவுக்கு பிடித்த அழகிய கிராமங்கள்- லிஸ்ட் இதோ!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *