டிஎன்பிஎஸ்சி தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை நியமிக்க ஆளுநர் மீண்டும் மறுத்திருப்பதாகக் கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்த பாலச்சந்திரன் கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். தற்போது பொறுப்புத் தலைவராக முனியநாதன் இருந்து வருகிறார்.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை நியமிக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்குத் தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்தது.
அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி, டிஎன்பிஎஸ்சி தலைவர் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்? உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டும் நெறிமுறைகள் பின்பற்றப்பட்டனவா? என்னென்ன நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இதற்குத் தமிழ்நாடு அரசு சார்பில் பதில் அளித்தும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.
இதுதொடர்பாக நமது மின்னம்பலத்தில் சைலேந்திரபாபு டிஎன்பிஎஸ்சி தலைவராக எதிர்ப்பு: ஆளுநர் எழுதிய குறிப்பு! என்ற தலைப்பில் விரிவாகச் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதனிடையே சைலேந்திரபாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க ஆளுநர் மறுப்புத் தெரிவித்த நிலையில், அவரை தலைவராக நியமிக்க மீண்டும் அரசு வலியுறுத்தியிருக்கிறது.
இந்த பரிந்துரையையும் ஆளுநர் நிராகரித்திருக்கிறார். டிஎன்பிஎஸ்சி. தலைவர் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக்கூறி வேறு ஒருவரைத் தேர்வு செய்ய ஆளுநர் பரிந்துரை செய்திருப்பதாகக் கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆளுநரின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “சைலேந்திர பாபு அவர்களுக்கு அந்தத் தகுதி இல்லை என்று தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் ரவி நிராகரித்திருப்பது அவரது அதிகார எல்லையை மீறிய தான்தோன்றித்தனமான சர்வாதிகார முடிவாகும்.
தமிழக அரசு செய்கின்ற பரிந்துரைகளை எல்லாம் நிராகரிக்கும் ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஏஜெண்டாகச் செயல்படுகின்ற தமிழக ஆளுநருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரியா
திருமாவளவன் அண்ணாமலை சந்திப்பு!
ஒரே வாரத்தில் 15 லட்சம் ஐபோன்கள் விற்பனை!
PAKvsAFG: சென்னையில் ’1999’ வெற்றியை மீண்டும் எதிர்பார்க்கும் பாகிஸ்தான்!