புதுக்கோட்டை தீண்டாமை பிரச்சனையை ஏற்படுத்திய நீர்தேக்கத் தொட்டியை இடிப்பதற்குத் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தரமற்ற செயலுக்குப் பலரும் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வந்தனர். இதுதொடர்பான வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
இரட்டை குவளை தேவையில்லை என்பது போல குடிநீருக்கு இரண்டு நீர்தேக்கத் தொட்டிகளும் தேவையில்லை. தீண்டாமையின் அடையாளமாகத் திகழும் தண்ணீர் தொட்டியை இருந்த இடமே தெரியாமல் இடித்து தரைமட்டமாக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தினார்.
ஆனால் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருக்கும் நீர்தேக்கத் தொட்டியை இடிக்கக் கூடாது எனக் கூறப்பட்டது.
முன்னதாக இச்சம்பவம் குறித்து விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, இதுவரை 70 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும், விரைவில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
இந்நிலையில் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள நீர்தேக்கத் தொட்டியை இடிப்பதற்குத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனிடையே, வேங்கைவயல் இறையூர் ஏடி தெருவில் குடிநீர் இணைப்பு மற்றும் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டியை அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 9 இலட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார் எம்.எம். அப்துல்லா எம்பி.
அந்த கிராமத்தில் உள்ள 32 வீடுகளுக்கும் 2 லட்சம் செலவில் புதிய குடிநீர் குழாய்களும், 7 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன .
மோனிஷா