மின் இணைப்புடன் ஆதார்: கடைசி தேதி எப்போது?
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க 2023 ஜனவரி 31-வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இன்று (டிசம்பர் 31) சென்னை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து அனைத்து இயக்குனர்கள் மற்றும் தலைமை பொறியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியபோது,
“மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால நீட்டிப்பு அளிக்க வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒப்புதலை பெற்று வருகிற 2023 ஜனவரி மாதம் 31-ஆம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் மின் நுகர்வோர்கள் ஜனவரி 31-க்கு பிறகு கால நீட்டிப்பு இருக்கும் என்ற மனநிலையில் இருந்துவிடாமல், ஜனவரி 31-க்குள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
2,811 அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று நடமாடும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
நாளை ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு முகாம்கள் நடைபெறாது. நாளை மறுநாள் ஜனவரி 2 முதல் 30 வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதுவரை 1.62 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளார்கள்.” என்றார்.
செல்வம்
மழை வெள்ள பாதிப்பு: அன்புமணி வேண்டுகோள்!
ரொனால்டோவை தட்டித் தூக்கிய சவுதி அரேபியா: எவ்வளவு கோடி தெரியுமா?