தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை (ஜூலை 22) அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் அறிவிக்க கோரி அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு (LCC) தலைவர் டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் சுகாதாரத் துறை சிறப்பாக செயல்படுகிறது. இருப்பினும் அதற்கான பங்களிப்பைத் தரும் அரசு மருத்துவர்களின் ஊதிய கோரிக்கையை அரசு இதுவரை நிறைவேற்றவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
திராவிட மாடல் அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது என தமிழக முதல்வர் பெருமையாக தெரிவிக்கிறார்கள். ஆனால் உண்மையில் தமிழகத்தில் மட்டுமே ஊதிய கோரிக்கைக்காக அரசு மருத்துவர்கள் தொடர்ந்து போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில், கலைஞர் ஆணையை (GO 354) அமல்படுத்த மறுப்பதையும், அதற்காக போராடும் மருத்துவர்களுக்கு 17பி குற்றக் குறிப்பாணை வழங்குதல் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கை என தண்டிக்கப்படுவதையும் உண்மையில் இங்கு யாருமே எதிர்பார்க்கவில்லை. நாட்டிலேயே தமிழகத்தில் தான் ஊதிய கோரிக்கைக்காக மருத்துவர் ஒருவர் உயிரையே கொடுத்துள்ளார்.
திமுக ஆட்சி அமைந்த பிறகு, தமிழக சட்டமன்றத்தில் பேசிய டாக்டர் எழிலன், சின்னதுரை, சிந்தனை செல்வன் மற்றும் எம்.ஆர். காந்தி ஆகிய 4 சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசை வலியுறுத்தினார்கள். இருப்பினும் அப்போது சட்டசபையில் மருத்துவத் துறை அமைச்சர் பதில் ஏதும் சொல்லவில்லை.
அரசு மருத்துவர்களின் ஊதிய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்கள் அரசை பல முறை வலியுறுத்திய பிறகும் நிறைவேற்றவில்லை.
உயிர்காக்கும் உன்னத பணியை மேற்கொள்ளும் அரசு மருத்துவர்களின் ஊதிய கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அனைத்துக் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகிறார்கள்.
கொரோனா பேரிடரில், தங்கள் உயிரையே பணயம் வைத்து பணியாற்றிய அரசு மருத்துவர்களின் மீது இன்று வரை முதல்வரின் பார்வை விழவில்லை என்பது தான் மிகுந்த வேதனையாக உள்ளது.
அதுவும் அரசு வேலை கேட்டு, கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவி கண்ணீருடன் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த பிறகும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.
கடந்த ஜூலை 1 ம் தேதி மருத்துவர்கள் தினத்தன்று வாழ்த்து செய்தி வெளியிட்ட முதல்வர், மருத்துவர்கள் நலனுக்கான அனைத்தையும் இந்த அரசு செய்து கொடுக்கும் என தெரிவித்து இருந்தார்கள்.
சொன்னதை செய்வோம் என தெரிவிக்கும் முதல்வர் அரசு மருத்துவர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றக் கோரிக்கை வைக்கிறோம்.
எனவே நாளை நடைபெறும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, தமிழக முதல்வர் கலைஞரின் அரசாணை 354-ன் படி, அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கப்படும் என்ற வரலாற்று சிறப்புமிக்க முக்கிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவி திவ்யா விவேகானந்தனுக்கு கல்வித் தகுதிக்கேற்ற அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா