சென்னையில் இன்று தடுப்பூசி முகாம்: ஆளுநர் வேண்டுகோள்!

தமிழகம்

சென்னையில் இன்று (ஜூலை 24) 2,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக மாநகராட்சி அறிவித்துள்ள நிலையில், கொரோனா  டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள் என்று தமிழக மக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மெகா தடுப்பூசி முகாம் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 32ஆவது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதற்காக 200 வார்டுகளில் 2,000 முகாம்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, வார்டு ஒன்றுக்கு ஒரு நிலையான முகாம் மற்றும் ஒன்பது நடமாடும் முகாம்கள் என ஒட்டுமொத்தமாக 1,000 சுகாதார குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணிகளில் மாநகராட்சி, காவல்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், இந்திய மருத்துவச் சங்கம் மற்றும் தெற்கு ரயில்வே துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளனர். எனவே முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் என அனைவரும் இன்று தங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மேயர் பிரியா தெரிவித்துள்ளார்” என்று   சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக மக்கள் அனைவரும் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டை சேர்ந்த என் அன்பான சகோதர, சகோதரிகள். கோவிட் தொற்று நோய் இன்னமும் இங்கே உள்ளது என்பது நாம் அனைவரும் அறிவோம். பொதுமக்கள் பலர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். சிலர் இறந்தும் உள்ளனர். தடுப்பூசி எடுத்துக்கொள்வதே பாதுகாப்பு ஆகும். இந்தியா முழுவதும் தீவிரமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது.
இந்தியா முழுவதும் 200 கோடி அளவிலான தடுப்பூசி செலுத்தும் பணி கடந்து உள்ளது. தொடரும் கோவிட் தொற்றைக் கருத்தில்கொண்டு, நமது பாரதப் பிரதமரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட இந்திய அரசு, 18 வயது முதல் 59 வயது வரை உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் இலவச கோவிட் பூஸ்டர் டோஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏராளமான சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிறப்பு முகாம்கள் நமது இந்திய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு நினைவாக 75 நாட்கள் நடைபெறுகிறது. என் அன்பான சகோதர, சகோதரிகளே, நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டு பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

– ராஜ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *