tamilnadu fishermen ride into sea after the cyclone

மீண்டும் கடலுக்குச் சென்ற மீனவர்கள்!

தமிழகம்

மிக்ஜாம் புயல் கரையை கடந்து மீன்பிடிக்க செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர்.

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக மீனவர்களின் பாதுகாப்பு கருதி ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல கடந்த சனிக்கிழமை முதல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடை விதித்து இருந்தது.

இதனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், சோளியக்குடி, தொண்டி, கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 6,000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் அந்தந்த துறைமுகங்களிலேயே பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

Image

இதற்கிடையே மிக்ஜாம் புயல் கரையை கடந்த நிலையில் மீன்பிடிக்க செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களில் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளிடம் மீன்பிடிக்க செல்ல அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு உற்சாகத்துடன் மீன்பிடிக்க சென்றனர்.

இதேபோல் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, கீச்சாச் சாங்குப்பம், நம்பியார் நகர், செருதூர், வேதாரண்யம், கோடியக்கரை , ஆற்காடு துறை உள்ளிட்ட 25 மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்களது 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளையும் 5,000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளையும் துறைமுகங்களில் எட்டு நாட்களாக பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர்.

இந்த நிலையில் மிக்ஜாம் புயல் கரையை கடந்ததைத் தொடர்ந்து மீன்வளத்துறை தடையை விலக்கிகொண்டதால் மகிழ்ச்சியடைந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் கடலுக்கு செல்வதால் அதிகப்படியான மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர். இதனால் வெறிச்சோடி கிடந்த மீன்பிடி துறைமுகங்கள்  களைகட்டத் தொடங்கியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

மிக்ஜாம் புயல் பாதிப்பு : நடிகர் விஜய் வேண்டுகோள்!

மதுபானங்களுக்கு அதிக வரி: உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *