தமிழக மீனவர்கள் 7 பேருக்கு விடுதலை!

தமிழகம்

இலங்கை கடற்படையினரால் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட 7 மீனவர்கள் இன்று (நவம்பர் 9) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி காலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடி அனுமதிச் சீட்டு பெற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

மீனவர்கள் கைது

கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மைக்கேல் ராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகைப் பறிமுதல் செய்தனர்.

மேலும் படகிலிருந்த கிளிண்டன், பேதுகு, வினிஸ்டன், தயான், மரியான், தானி, ஆனஸ்ட் ஆகிய ஏழு மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் தமிழக மீனவர்கள் 7 பேரையும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.

வேலைநிறுத்த போராட்டம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலை நிறுத்த போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர்கள் விடுதலை

இந்நிலையில், இந்த வழக்கு இலங்கை ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 9 ) விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து ஊர்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்த வழக்கில் சிக்கினால், அவர்களுக்குக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த 7 மீனவர்களும் தற்போது இந்தியத் துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இன்னும் 2 அல்லது மூன்று தினங்களில் தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகு குறித்த விசாரணை வரும் ஜனவரி மாதம் நீதிமன்றத்திற்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.

மோனிஷா

தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி எது?

சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *