இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (நவம்பர் 19) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சூறாவளிக்காற்று காரணமாக கடந்த 5 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்து வந்த நிலையில் நேற்று ராமேஸ்வரம், பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.
அப்போது வங்கக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் 22 மீனவர்களை கைது செய்ததோடு, 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் ராமேஸ்வரம் வந்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் விசைப்படகு மற்றும் நாட்டு படகு மீனவர் சங்கத் தலைவர்கள் நேற்று நேரில் சென்று சந்தித்துள்ளனர். அவரிடம் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையின் அடிப்படையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொலைபேசி மூலம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இலங்கை அரசிடம் மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து 22 மீனவர்களையும் 2 விசைப்படகுகளையும் இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது. மேலும் மீனவர்களை சர்வதேச கடல் பகுதி வரை இலங்கை கடற்படையினர் கொண்டு வந்து விட்டதாக மீனவர் சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அமைச்சரின் நடவடிக்கையால் கைது செய்யப்பட்ட அடுத்த நாளே விடுதலை செய்யப்பட்டது மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதற்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வை கொண்டு வர வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர் அலிகான் விளக்கம்!
World Cup Final: 3வது முறையாக கோப்பையை வெல்லுமா இந்தியா?