இரிடியம் என்ற பெயரில் பொதுமக்களை மோசடி கும்பல் ஏமாற்றி வருவதாக டிஜிபி சைலேந்திர பாபு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.
தற்போதைய காலத்தில் கொலை, கொள்ளை போன்ற குற்றங்களையும் தாண்டி தொழில்நுட்பம் மூலம் நூதன மோசடிகளும் நடைபெற்று வருகிறது.
இந்த மோசடிகளில் இருந்து மக்களை பாதுகாக்கத் தமிழக அரசும், தமிழ்நாடு காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இந்நிலையில் இரிடியம் முதலீடு என்ற பெயரில் மோசடி நடப்பதாகத் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு வீடியோ வெளியிட்டு மக்களை எச்சரித்துள்ளார்.
அந்த வீடியோவில், “இரிடியம் மோசடி, இது ஒரு புது விதமான மோசடி. இதில் ஒரு சிலர் ஏமாந்து இருக்கிறார்கள்.
இரிடியம் என்ற பொருளை வாங்கி விற்கலாம். நம்மிடம் ஒரு புது பிசினஸ் இருக்கு. இது யாருக்கும் தெரியாது. ரகசியமாக இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள்.
நீங்கள் இதில் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 2 ஆண்டுகள் கழித்து 3 கோடி ரூபாய் கிடைத்துவிடும் என்று சொல்லுவார்கள்.
இதை நம்பி நீங்களும் அவசரமாக முதலீடு செய்யலாம் என்று போவீர்கள்.
ஆனால் அவர்கள், ஏற்கனவே நிறையப் பேர் முதலீடு செய்து விட்டார்கள். அதனால் உங்கள் முதலீட்டை ஏற்றுக் கொள்ள முடியவில்லை மன்னித்து விடுங்கள் என்று சொல்லுவார்கள்.
ஆனால் நீங்கள் மறுபடியும் போய் முதலீடு செய்யும் போது உங்கள் 5 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொள்வார்கள். ஆனால் 2 ஆண்டுகள் கழித்து அவர்கள் சொன்னது போல் பணத்தைக் கொடுக்க மாட்டார்கள்.
நீங்கள் பணம் கொடுத்தவர்களிடம், பணத்தைக் குறித்துக் கேட்கும் போது அவர்கள், எங்களுக்கு மேல் பெரிய அதிகாரிகள் இருக்கின்றார்கள் அவர்கள் தான் இதனைப் பார்த்துக் கொள்கிறார்கள்.
அந்த அதிகாரிகளை பார்ப்பதற்கு அழைத்துக் கொண்டு போறோம் என்று உங்களைச் சென்னைக்கு அழைத்து வருவார்கள்.
அந்த அதிகாரியை பார்க்க உங்களை பல பகுதிகளில் அலையவிட்டு, பிறகு அதிகாரி அமெரிக்கா சென்று விட்டார் என்று கூறுவார்கள்.
இப்படி நீங்கள் சோர்வடையும் வரை அலையவிட்டு பின்னர் உங்களின் 5 லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றி விடுவார்கள்.
இந்த மோசடியில் நிறையப் பேர் தமிழ்நாட்டில் ஏமாந்து இருக்கிறார்கள். சேலம், கன்னியாகுமரியில் வழக்குப் பதிவு செய்துள்ளோம்.
அதேபோல் கேரளாவில் இருந்து சிலர் பணத்தை இழந்து விட்டு இங்கு வந்து நிற்கிறார்கள்.
இரிடியம் முதலீடு என்றாலே, மோசடி என்று பொருள். உடனே அந்த நபரை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்து விடுங்கள்.
கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை அதில் கொடுத்து நீங்கள் ஏமாந்து விடாதீர்கள். ரொம்ப கவனமாக இருங்கள்” என்று பேசியுள்ளார்.
மோனிஷா
மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தீ விபத்து: ஆவணங்கள் எரிந்து சாம்பல்!
தங்கம் விலை: ஒரே நாளில் அதிரடி வீழ்ச்சி!