தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு பீகார் டிஜிபி உடன் தொலைப்பேசி வாயிலாக பேசியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு கடந்த சில மாதங்களாகவே வட மாநிலத்தவர்கள் அதிகளவு வந்து கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் கடந்த மாதம் திருப்பூரில் 10-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் தமிழக இளைஞரை உருட்டுக் கட்டை போன்ற ஆயுதங்களை வைத்துத் தாக்குவது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெறும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் திருப்பூர் மற்றும் கோவையில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவி வைரலானது.

இந்த வீடியோ பீகார் முதலமைச்சர் நீதிஷ் குமார் வரை சென்றது. அவர் தன்னுடைய ட்விட்டரில், “தமிழக அரசு அதிகாரிகளுடன் பேசி, அங்கு வசிக்கும் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பீகார் தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஜனரல் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பாகத் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், ”புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாகப் பீகாரில் உள்ள ஒருவர் தவறான வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது இரண்டு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அவை திருப்பூர் மற்றும் கோவையில் எடுக்கப்பட்டிருக்கிறது.
அதில் ஒன்று பீகார் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இரு குழுக்களுக்கு இடையேயான மோதல் மற்றும் மற்றொரு வீடியோ கோயம்புத்தூரில் வசிக்கும் இரண்டு உள்ளூர் வாசிகளுக்கு இடையேயான மோதல் ஆகும்.
தமிழ்நாட்டு மக்களுக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் இடையிலான மோதல் அல்ல. இதுதான் உண்மை நிலவரம்” என்று தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து தொழிலாளர் மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் ”வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வெளியாகிப் பரவி வரும் வீடியோ உண்மைக்கு மாறானது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மட்டுமல்ல எல்லா மாநில தொழிலாளர்களும் எவ்வித அச்சமுமின்றி அமைதியாக, சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, பீகார் டிஜிபி உடன் தொலைப்பேசி வாயிலாகப் பேசியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாட்னா, ஏடிஜி ஜெ.எஸ்.காங்வார், “பழைய வீடியோக்கள் தவறாகப் பகிரப்பட்டுப் பரவி வருகிறது. தமிழகத்தில் பீகார் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் எங்களின் கவனத்திற்கு வரவில்லை.
மாநில காவல்துறை இந்த விஷயத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. பீகார் போலீசார் தமிழகத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருகின்றனர்.
இரு மாநிலங்களின் டிஜிபிக்களும் இந்த பிரச்சனை குறித்து விவாதித்தனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது” என்று பேசினார்.
இது குறித்து பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், “பாஜக மற்றும் பாஜக ஆதரவு ஊடகங்களால் உண்மைக்கு எதிராக எதுவும் செய்யமுடியாது. அவர்களது பொய் மீண்டும் பிடிபட்டு விட்டது.
குழப்பம், பொய், வெறுப்பு, வன்முறை மற்றும் வதந்திகளைப் பரப்புவது பாஜகவின் முக்கிய வியாபாரம் மற்றும் மூலதனம். தேசப்பற்றுள்ள எவரும் சமூகத்தில் வெறுப்பையும் குழப்பத்தையும் பரப்பக் கூடாது” என்று கருத்து தெரிவித்திருந்தார்.
மோனிஷா
மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து: ஆட்சியில் அமரப்போகும் அதே முதல்வர்கள்?
மோடி- உதயநிதி சந்திப்பு: மூடு மந்திரமான அந்த 40 நிமிடங்கள்- நிராகரித்த மம்தா, சுதாரித்த ஸ்டாலின்