தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நாளை (பிப்ரவரி 19) தாக்கல் செய்கிறார்.
இந்தநிலையில், ‘தடைகளை தாண்டி, வளர்ச்சியை நோக்கி’ என்ற பெயரில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இலட்சினை இன்று (பிப்ரவரி 18) வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“தமிழ்நாடு இன்று உயர்கல்வியில் முன்னணி மாநிலம். மருத்துவத் துறையில் முன்னணி மாநிலம். தொழில்துறையில் முன்னணி மாநிலம். இந்தியப் பொருளாதாரத்தில் உயர்ந்துள்ள முன்னணி மாநிலம்.
வேளாண்மையில் முன்னணி மாநிலம். விளையாட்டுத் துறையில், இளைஞர் தம் ஆற்றல் நிறைந்துள்ளதில் முன்னணி மாநிலம் என எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டு எத்திசையிலும் புகழ் பதித்துத் திகழ்கின்றது. ஏடும், நாடும் இதர மாநிலங்களும் இதற்குச் சான்று பதிக்கின்றன.
இந்நிலையில், ஆட்சிப் பொறுப்பேற்ற மே 2021-ஆம் ஆண்டில் ஆட்டிப்படைத்த கொரோனாவை முறியடித்து, காலமல்லாக் காலத்தே புயலும், மழையும், வீசி கடும் சேதங்களை விளைவித்த நிலையிலும், “எல்லோர்க்கும் எல்லாம்” என்ற இலக்கினை எளிதில் எய்திடும் வண்ணம் இன்று நான்காம் ஆண்டில் நிதிநிலை அறிக்கையைப் பேரவையில் அளிப்பதில் பெருமிதம் கொள்கிறது.
தமிழ்நாடு அரசின் 2024-25 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் பேரவையில் பெருமிதத்துடன் அளிக்கப்படுவதைக் குறிக்கும் சின்னமாக நிதிநிலை அறிக்கையின் முத்திரைச் சின்னம் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.
“யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே” எனும் பழமொழிக்கேற்ப வரும் ஆண்டின் நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முன்னே முழங்கிடும் முத்துச் சின்னமாக இது விளங்கிடும் என்பது திண்ணம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுக ஆட்சியில் மீனவர்கள் துயரம்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு!
’வெயில் அதிகரிக்கும் மக்களே’ : வானிலை மையம் எச்சரிக்கை!