எவரெஸ்ட் சிகரத்தில் தமிழர்கள்: முதலமைச்சரின் உதவியும் பாராட்டுகளும்!

Published On:

| By Kavi

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி என்பவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற அவருக்கு 10 லட்சம் ரூபாயை தமிழக அரசு சார்பில் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த நிலையில், தற்போது எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த சென்னை கோவளத்தைச் சேர்ந்த இளைஞர் இராஜசேகர் பச்சைக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி என்பவர் எவரெஸ்ட் சிகரம் ஏற நிதியுதவி செய்யுமாறு தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்தார்.

கடந்த மார்ச் 28ஆம் தேதி தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ரூ.10 லட்சம் காசோலை வழங்கினார்.

கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி முதல் முத்தமிழ்ச்செல்வி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வருகிறார். எவரெஸ்ட் சிகரத்தை அடையும் பயணத்தில் 7,200 மீட்டர் உயரத்தைக் கடந்து வெற்றிகரமாக பயணித்து வருகிறார்.

எவரெஸ்ட் சிகரத்தை எட்டும் பயணத்தை மேற்கொண்டுவரும் முத்தமிழ்ச்செல்வியை போனில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த கோவளத்தைச் சேர்ந்த இளைஞர் இராஜசேகர் பச்சைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

“பல்வேறு விளையாட்டு களிலும் நம் இளைஞர்கள் முத்திரை பதித்து நம்மையும் தமிழ்நாட்டையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறார்கள்.

அந்தவகையில் கோவளத்தைச் சேர்ந்த இராஜசேகர் பச்சை எனும் இளைஞர் உலகின் மிக உயரிய எவரெஸ்ட் சிகரத்தைத் தன் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் ஏறி அடைந்துள்ளார் என்று அறிந்து மகிழ்ந்தேன்.

அவருக்கு எனது பாராட்டுகள்” என்று கூறியுள்ளார்.

ராஜ்

கிச்சன் கீர்த்தனா: நேரம் தவறி சாப்பிடுபவர்களா நீங்கள்?

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share