மூடநம்பிக்கை விதைத்தவரை ஓட ஓட விரட்டிய தமிழாசிரியர் – யார் இந்த சங்கர்?

தமிழகம்

அரசுப் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் மூட நம்பிக்கையை விதைக்கும் வகையில் பேசிய மகாவிஷ்ணுவை, தட்டிக்கேட்ட தமிழ் ஆசிரியர் சங்கருக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் சென்னையில் உள்ள அசோக் நகர் அரசு பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு மாதிரி பள்ளியில் பரம்பொருள் அறக்கட்டளையைச் சேர்ந்த மகாவிஷ்ணு ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.

“மனிதர்கள் முந்தைய பிறவிகளில் செய்த பாவ – புண்ணியங்களின் அடிப்படையில் இந்தப் பிறவியில் பலன்களை அனுபவிக்கிறார்கள். கண், காது கேட்காமல் குறைபாடுகளோடும், நோய்களோடும் பிறக்கின்றனர்” என்று மகாவிஷ்ணு பேசிக்கொண்டிருந்த போது,

“ என்ன இது மோட்டிவேஷன்ல் ஸ்பீச்சா, ஆன்மீக சொற்பொழிவா, கர்மா பற்றி பேசிக்கிட்டிருக்கீங்க?” என தட்டிக்கேட்டார் ஆசிரியர் சங்கர்.

மற்ற ஆசிரியர்கள் எல்லாம் அமைதியாக இருக்க, பார்வை குறைபாடு கொண்ட தமிழ் ஆசிரியர் சங்கர் முன்வந்து கேள்வி எழுப்பினார்.

இவர் கேள்வி கேட்ட 10 நிமிடங்களில் அந்த சொற்பொழிவை மகாவிஷ்ணு முடித்துவிட்டு கிளம்பிவிட்டார்.

இந்தசூழலில் ஆசிரியர் சங்கர் எதிர்த்து கேள்வி கேட்ட வீடியோ இன்றளவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரடியாக பள்ளிக்கே சென்று தமிழாசிரியர் சங்கரை  பாராட்டினார்.

யார் இந்த சங்கர்?

பார்வை மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் சிறப்பு பள்ளியில் படிக்காமல், எல்லோரும் படிக்கக் கூடிய பள்ளியில் தான் படித்தவர் சங்கர். 12ஆம் வகுப்பில் பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் பிரிவில் மாநில அளவில் இவர் தான் முதலிடம் பிடித்தார்.

அதைத்தொடர்ந்து விடாமுயற்சியாக தமிழில் பிஏ, எம்.ஏ, பி.எட் படிப்புகளை படித்து, தற்போது பி.எச்டி முடித்துள்ளார். கல்லூரி படிப்பின் போது, தமிழ் மன்றத்தின் செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

கடந்த பிப்ரவரி மாதம் ‘பகுத்தறிவு’ என்ற தலைப்பில் பிஎச்.டி பட்டம் பெற்றார்.

சங்கரின் மனைவியும் ஒரு அரசு ஊழியர். அவரும் பார்வை குறைபாடு உடையவர். சங்கரின் முதல் தம்பி வருவாய் ஆய்வாளராக உள்ளார். இவரும் பார்வை மாற்றுத்திறனாளி.

இரண்டாவது தம்பியும் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மாற்றுத்திறனாளி.

இப்படிப்பட்ட குடும்ப பின்னணியில் இருந்து வந்த சங்கர்,  எந்தவித சிறப்பு ஒதுக்கீட்டின் கீழும் அரசு பள்ளி ஆசிரியராக வரவில்லை.

எவ்வித பிரச்சினையும் இல்லாத ஆரோக்கியமாக இருக்கக்கூடிய மற்றவர்களைப் போலவே மெரிட் அடிப்படையில் ஆசிரியராக 2009ல் பணியில் சேர்ந்துள்ளார்.

தற்போது சைதாப்பேட்டை அரசு மாதிரி பள்ளியில் தமிழ் ஆசிரியராக உள்ளார்.

‘மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த காலத்தில் தொழில்நுட்ப வசதிகள் ஏராளமாக உள்ளன. ஆனால் அந்த காலத்தில் வாசிப்பதற்கு யாராவது கிடைத்தால் அவரை வாசிக்கச் சொல்லி நிறைய கற்றுக்கொண்டவர் சங்கர். வாசிப்பவர்களை தேடி தேடி செல்வார். தான் மட்டுமல்ல,  தம்பியையும் அவர் தான் படிக்கவைத்தார். பார்வை குறைபாடு கொண்ட தனது மனைவி பவானிக்கும் ஊக்கம் கொடுத்து படிக்கவைத்து இளநிலை உதவியாளராக அவரையும் அரசு ஊழியர் ஆக்கினார்’ என்கிறார்கள் சங்கர் நண்பர்கள் வட்டாரத்தில்.

பல தடைகளைத் தாண்டி ஆசிரியராக உள்ள சங்கரின் முன்னிலையில் முன்ஜென்மத்தில் செய்த பாவம்தான், இந்த ஜென்மத்தில் கண் தெரியவில்லை, காது கேட்கவில்லை என்று சொன்னால் பகுத்தறிவு முனைவர் சும்மா இருப்பாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மகாவிஷ்ணுவை தட்டிக்கேட்டது குறித்து  ஊடகங்களிடம் முனைவர் சங்கர் கூறுகையில், “முற்பிறவி, மறுபிறவி என நடைமுறைக்கு ஒவ்வாத விஷயங்களை பேசினார் மகாவிஷ்ணு. அது எனக்கு பிடிக்கவில்லை. அவருக்கு கொடுக்கப்பட்ட தலைப்பே `சிகரம் தொடு’ என்பதுதான்.

ஆனால் மாற்றுத்திறனாளிகளை கேவலப்படுத்தும் வகையில் பேசியது தனிப்பட்ட முறையில் எனக்கு காயம் ஏற்பட்டது. சமத்துவமான இடத்தில் குறிப்பிட்ட மதம் சார்ந்து அனுமதிக்க முடியுமா?

பதிலுக்கு என்னுடைய சமூகம், சாதியை பற்றி தெரிந்துகொள்ள முயன்றார். ஆனால் நான் எதுவும் சொல்லவில்லை.

மற்ற ஆசிரியர்கள் தைரியமாக பேசியதாக என்னை பாராட்டினார்கள்.

மகாவிஷ்ணுவின் யூடியூப் பக்கத்தில் நிறைய பேர் என்னை திட்டியிருந்தார்கள்.

ஆனால் பல சவால்களை, தடைகளை கடந்து என்னை போன்றவர்கள் இந்த இடத்துக்கு வந்திருக்கிறோம். எங்களது நம்பிக்கையை இழக்க வைக்கும் வகையில் பேசலாமா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆசிரியர் சங்கரின் அறிவு பார்வை ஆழமானது… அறிவுக்கண் கொண்டவர் என பலரும் பாராட்டி வரும் அதேவேளையில், மகா விஷ்ணுவைக் கண்டித்த ஆசிரியர் சங்கர் கிறிஸ்தவர் என வதந்தியும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதற்கு தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு மறுப்புத் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

வெறுத்து ஒதுக்கிய பெயர்… தவிர்க்க முடியாததாக மாறியது எப்படி? – மம்முட்டிக்கு 73 வயது!

இந்த வார OTT ரிலீஸ் : பேட் பாய்ஸ் முதல் கில் வரை!

+1
0
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *