தூய்மை பணியாளர்கள் நியமனம்: டெண்டர் குழுவிற்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!

தமிழகம்

அரசுப் பள்ளிகளில் தமிழ் தெரிந்த தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று டெண்டர் குழுவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறை கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் தூய்மை பணிகளுக்குத் தனியார் நிறுவனங்களை அமர்த்துவது என்று முடிவெடுக்கப்பட்டு இதற்காக டெண்டர் கோரப்பட்டது.

இந்த டெண்டருக்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் 25 லட்சம் சதுரடி பரப்பில் செயல்பட வேண்டும்,

கடந்த 3 ஆண்டுகளில் ஒரு ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் செய்திருக்க வேண்டும், 5 ஆயிரம் பணியாளர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்த டெண்டரை எதிர்த்து “quality property” என்ற நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தனிநீதிபதி அமர்வு, “டெண்டர் நிபந்தனைகளில் தலையிட முடியாது” என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.

தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று (ஏப்ரல் 25) பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது, 25 லட்சம் சதுர அடி என்பது 10 லட்சம் சதுர அடியாகவும்,

ஆண்டுக்கு 50 கோடி வர்த்தகம் என்பது 30 கோடி வர்த்தகமாகவும்,

3 ஆயிரம் ஊழியர்கள் இருக்க வேண்டும் என்று நிபந்தனைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், நிபந்தனைகள் டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டப்படி வெளியிடப்பட்டிருப்பதாகவும்,

அதை எதிர்க்க முடியாது என்று தெரிவித்த தமிழக அரசு இப்போது திருத்தியது ஏன் என்று விளக்கம் அளிக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து தற்போதுள்ள டெண்டரை ரத்து செய்து புதிய டெண்டரை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகள் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தகவல் பரிமாறுவதற்கு ஏற்றவாறு பாதுகாவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் தமிழ் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று டெண்டர் குழுவிற்கு நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளனர்.

மோனிஷா

யூ-டர்ன் திமுக : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தேதி மாற்றம்? : அன்பில் மகேஷ் அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *