தமிழ் மொழியல்ல, நம் உயிர்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழகம்

“தமிழ் வெறும் மொழியல்ல, அது நம்முடைய உயிர்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால், இன்று (செப்டம்பர் 24) தமிழ் பரப்புரை கழகம் தொடங்கிவைக்கப்பட்டது.

பரப்புரை கழகத்தைத் தொடங்கிவைத்து உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ”தமிழ் வெறும் மொழியல்ல, அது நம்முடைய உயிர். வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்று முழங்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்குத் தமிழ் பரப்புரை கழகம் தொடங்குவது முழு முதல் கடமையாகும்.

திமுக என்றாலே தமிழ், தமிழ் என்றாலே திமுக என்று வளர்க்கப்பட்டதுதான் இந்த இயக்கம். அந்த இயக்கம் ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. அதற்கு முன்னாள் இந்த மாநிலத்திற்குச் சென்னை மாகாணம் என்று பெயர் இருந்தது. அதனை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் பேரறிஞர் அண்ணா.

tamil parappurai kazhagam scheme start cm stalin speech

அத்தகைய அண்ணாவின் பெயரால் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் பரப்புரை கழகம் துவங்குவது பொருத்தமானது. அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்பதை உள்ளடக்கமாகக் கொண்டு திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்தி வருகிறோம்.

அந்த வகையில் தகவல் தொழில்துறைகள் வளர்ச்சியடைந்து வருகின்றன. தமிழகத்தில் தகவல் தொழில்துறைக்கு அடித்தளமிட்டதே திமுக ஆட்சிதான். இதற்குச் சாட்சியாக இன்றும் எழிலுடன் நிற்கிறது டைடல் பார்க். 1996 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் தொடங்கிய தகவல் தொழில்நுட்ப துறை இன்று 27 ஆண்டுகள் கழித்தும் மகத்தான வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது.

உலகம் முழுவதும் தமிழ்நாட்டு இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள் என்றால் அதற்குக் கலைஞர்தான் அடித்தளம் அமைத்தார். அதனுடைய அடுத்தகட்டம்தான் கணினிமயமாக்குதல். நம்முடைய அறிவு சொத்துக்கள் அனைத்தையும் முழுமையாக அறிவியல் தொழில் நுட்பங்களின் அடிப்படையில் மாற்றிச் சேமித்து வைக்கும் பணியைத் தமிழ் இணையக் கல்விக் கழகம் செய்து வருகிறது.

1999 ஆம் ஆண்டு தமிழ்நெட் 99 என்ற தமிழ் இணைய வழி மாநாட்டின் மூலம் இணையத் தமிழ் தொடர்பான முன்னெடுப்புகளையும், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் தோற்றத்தையும் கலைஞர் அறிவித்தார். அதன்பின் 2000 ஆம் ஆண்டில், தமிழ் இணையக் கல்விக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. பல நூறு ஆண்டுகளாகத் தமிழின் சொத்துக்கள் சேகரித்து வைக்கப்படாமல் அழிந்துபோய் விட்டன. அந்த தவறு தடுக்கப்பட்டுள்ளது.

உ.வே. சாமிநாதர் போன்ற ஒரு சிலரால்தான் தமிழ் இலக்கியங்கள் காப்பாற்றப்பட்டன. இதற்கு மகுடம் வைப்பதைப்போல் தமிழ் பரப்புரை கழகம் இன்று துவக்கிவைக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிகமாகவும், 60க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் வாழ்கிறார்கள்.

சில நாடுகளில் தமிழ் எழுதவும், பேசவும் மறந்த தமிழர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் அனைவருக்கும் தமிழைச் சொல்லிக் கொடுப்பதற்காகத்தான் தமிழ் பரப்புரை கழகம் தொடங்கப்பட்டுள்ளது. 24 மொழிகளில் தமிழ் பாடநூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மொழியால் இணைந்தவர்களைச் சாதி மதத்தால் பிரிக்க முடியாது. தமிழைப் பாதுகாத்துவிட்டோம். இனி பரப்ப வேண்டிய காலம். அதனால்தான் தமிழ் பரப்புரை கழகம் துவங்கியுள்ளோம். ஆட்சிக்கு வந்து கடந்த ஓர் ஆண்டில் தமிழுக்கு எத்தனையோ தொண்டுகளை திமுக செய்துள்ளது” என்றார், முதல்வர் ஸ்டாலின்.

மோனிஷா

கோவை புது மாசெக்கள்: செந்தில் பாலாஜி போட்ட ஸ்கெட்ச்!

சீன அதிபர் கைது? வைரலாகும் வீடியோ!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

2 thoughts on “தமிழ் மொழியல்ல, நம் உயிர்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

    1. Suburb idea I am welcomed for this onbehalf of all tamilian I am very proud that being a Tamil Nadu and born in Tamil Nadu as a tamilian

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *