குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வைப்பவர்களுக்குச் சிறப்புப் பரிசு வழங்கப்படுவதோடு கல்விக் கட்டணம் செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் சார்பாக சென்னை சைதாப்பேட்டையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்துக்கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர்.
குழந்தை ஆரோக்கியமாக வளர தடுப்பூசி போடுதல், தகுந்த பரிசோதனைகள் செய்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்ப்பிணிகளுக்கு புடவை, வளையல், பூ, பழம், மஞ்சள், கண்ணாடி தட்டு அடங்கிய வரிசை தட்டுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வைப்பதை பெருமையாகக் கருத வேண்டும். அடுத்த ஆறு மாதங்களில் விழா ஒன்று நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
அதில் தமிழில் பெயர் வைத்தவர்களுக்குச் சிறப்புப் பரிசு வழங்கப்படுவதோடு, குழந்தைகளுக்கான கல்விக் கட்டணமும் செலுத்தப்படும்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பின்னர் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு ஐந்து முறை சாப்பிட வேண்டும். 1098 என்ற உதவி எண்கள் மூலம் பெண்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் புகார் அளிக்கலாம்.
பெண்களுக்கு உளவியல் ரீதியிலான பிரச்சினை ஏற்பட்டாலும் இந்தத் தொலைப்பேசி எண்ணுக்கு அழைத்தால் ஆலோசனை வழங்கப்படும்” என்று கூறினார்.
-ராஜ்
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!
தவறான தகவலுக்கு உண்மையைச் சொல்லுங்கள்: ஸ்டாலின்