தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகம் 91.67 மதிப்பெண்களுடன் ஏழாவது இடத்தைப் பெற்று, மிகச் சிறந்த புலிகள் காப்பகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் புலிகளின் இருப்பிடத்தைப் பாதுகாத்து, அதன் அழகைப் போற்றலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காடுகளின் காவலன் என அழைக்கப்படும் புலி, நம் நாட்டின் தேசிய வனவிலங்கு. உலக அளவில் புலிகளின் எண்ணிக்கை குறைந்துவந்ததைத் தொடர்ந்து, புலிகளை பாதுகாக்கும் நோக்கில் ஆண்டுதோறும் ஜூலை 29ஆம் தேதி சர்வதேச புலிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் புலிகள் மாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த ஆண்டில் இருந்து புலிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அழிவின் விளிம்பில் இருந்த புலிகளின் எண்ணிக்கை அண்மையில் கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் புலிகள் காப்பகங்களின் மேலாண்மை செயல்திறன் மதிப்பீடு தொடர்பாக இறுதி மற்றும் ஐந்தாவது சுற்று அறிக்கையை மத்திய அரசு நேற்று (ஜூலை 29) வெளியிட்டுள்ளது. உலக புலிகள் தினத்தை முன்னிட்டு கார்பெட் புலிகள் காப்பகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ஒன்றிய இணை அமைச்சர் அஸ்வினி குமார் செளபே விரிவான அறிக்கையை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், 51 புலிகள் காப்பகங்களின் செயல்முறை மூலம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. இந்த மதிப்பீடு பணியை மேற்கொள்ள அமைக்கப்பட்ட 10 சுயேச்சையான பிராந்திய நிபுணர் குழுக்கள் 51 புலிகள் காப்பகங்களுக்கும் சென்று கள இயக்குநர்கள் சமர்ப்பித்த ஆதரவு ஆவணங்களை சரிபார்த்த பின்னர் மதிப்பெண்களை அளித்துள்ளனர்.
இதில், அதிகபட்ச மதிப்பெண்களின் சதவிகிதத்தின் அடிப்படையில் முடிவுகள் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 50-59% வரை ‘சுமார் ‘ என்றும், 60-74% வரை ‘நன்று’ என்றும், 75-89% வரை ‘மிகவும் நன்று’ என்றும், 90% -க்கு மேல் ‘சிறந்தது’ என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, மொத்தம் 12 புலிகள் காப்பகங்கள் ‘சிறந்தது’ பிரிவிலும், 21 புலிகள் காப்பகங்கள் ‘மிக நன்று’ பிரிவிலும், 13 புலிகள் காப்பகங்கள் ‘நன்று’ பிரிவிலும், ஐந்து புலிகள் காப்பகங்கள் ‘சுமார்’ பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.
இதில், 94.53 மதிப்பெண்களுடன், தேக்கடியில் உள்ள பெரியார் புலிகள் காப்பகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சத்புரா புலிகள் காப்பகம் 93.18 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்திலும், பந்திப்பூர் புலிகள் காப்பகம் 93.18 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இவற்றில் தமிழகத்தின் ஆனைமலை புலிகள் காப்பம் 91.67 மதிப்பெண்களுடன் ஏழாவது இடத்தைப் பெற்று மிகச் சிறந்தது என்றும், முதுமலை, சத்தியமங்கலம், களக்காடு – முண்டந்துறை ஆகியவைகள் மிக நன்று என்றும், ஸ்ரீவில்லிபுத்துார், மேகமலை ஆகியவை நன்று என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக பேசியுள்ள தமிழக வனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, “தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2018ஆம் ஆண்டு 264 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 306 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. இதன்படி 2006ஆம் 76, 2010ஆம் ஆண்டு 163, 2014ஆம் ஆண்டு 229 புலிகள் தமிழகத்தில் இருந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் புலிகளின் இருப்பிடத்தை பாதுகாத்து, அதன் அழகைப் போற்றலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘சர்வதேச புலிகள் தினத்தில், புலிகளின் பாதுகாப்புக்காக கர்ஜிப்போம்; அழிந்து வரும் இந்த உயிரினங்களைப் பாதுகாப்பதில் தமிழ்நாட்டின் அர்ப்பணிப்பு குறிப்பிடத்தக்க முடிவுகளை அளித்துள்ளது; 2018இல் 264 ஆக இருந்த புலிகள் எண்ணிக்கை 2022இல் 306 ஆக அதிகரித்துள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து புலிகளின் இருப்பிடத்தை பாதுகாத்து, அதன் அழகைப் போற்றலாம்” எனப் பதிவிட்டுள்ளார்.
கிச்சன் கீர்த்தனா: காலை உணவைத் தவிர்த்தால், உடல் எடை குறையுமா?