திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஜனவரி 12) உயிரிழந்துள்ளது பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் மையப்பகுதியில் நெல்லையப்பர் கோயிலும் ஒன்று. தென் தமிழகத்திற்கு சுற்றுலா செல்வோரும், சபரிமலைக்கு செல்வோரும் தவிர்க்க முடியாத திருப்பயணம் மேற்கொள்ளும் தலமாக இக்கோயில் உள்ளது.

இங்கு கடந்த 40 வருடங்களாக உள்ள காந்திமதி என்ற யானை பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி வந்தது.
கடந்த 1985 ஆம் ஆண்டு நயினார் பிள்ளை என்பவரால் நெல்லையப்பர் கோயிலுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட காந்திமதிக்கு தற்போது 56 வயதாகிறது. இது தமிழக கோயில்களில் உள்ள வயதான யானையாக கருதப்படுகிறது.
கடந்த சில வருடங்களாகவே மூட்டுவலி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த யானைக்கு தொடர் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை படுத்துத் தூங்கிய காந்திமதியால் அதன் பிறகு மீண்டும் எழ முடியவில்லை. இதனையடுத்து அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் வனத்துறை மருத்துவர்களும் உடனடியாக கோயிலுக்கு வந்து கிரேன் மூலம் தூக்கி காந்திமதிக்கு சிகிச்சை அளித்தனர்.
ஆனால் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், சிகிச்சை பலனின்றி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி இன்று அதிகாலை உயிரிழந்தது. இது பக்தர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
’சாகும் வரை மறக்கமாட்டேன்’ : ரசிகர்கள் முன்னால் மீண்டும் மாஸ் கம்பேக் கொடுத்த விஷால்
நாளை முதல்வர் தொடங்கி வைக்கும் சென்னை சங்கமம்… எந்த இடத்தில் எந்த நிகழ்சிகள்… முழு விவரம்!