மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள ஸ்டார்ட்அப் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) என்பது இந்தியாவில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு துறை ஆகும்.
இது தேசிய முன்னுரிமைகள் மற்றும் சமூக-பொருளாதார நோக்கங்களைக் கருத்தில் கொண்டு, தொழில்துறையின் வளர்ச்சிக்கான ஊக்குவிப்பு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் ஸ்டார்ட் அப் தினத்தை முன்னிட்டு நேற்று (ஜனவரி 16) இந்தியாவில் உள்ள 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 2022ஆம் ஆண்டுக்கான ஸ்டார்ட் அப் தரவரிசைப் பட்டியலை மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் வெளியிட்டார்.
அதில் ’சிறந்த செயல்திறன்’ கொண்ட 5 மாநிலங்களுள் ஒன்றாக தமிழ்நாடு முதலிடத்தை பெற்றுள்ளது. மேலும் இதில் குஜராத், கர்நாடகா, கேரளா மற்றும் இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 17) வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஸ்டார்ட் அப் தரவரிசைப் பட்டியலில், ‘வளர்ந்து வரும் சுற்றுச்சூழல்’ என்று வகைப்படுத்தபட்டு கடந்த ஆட்சிக் காலத்தில் 2018ஆம் ஆண்டு கடைசித் தரநிலையில் இருந்தது தமிழ்நாடு,
நமது ஆட்சியில் 2022-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் தமிழ்நாடு முதலிடத்தை அடைந்துள்ளது!
TANSEED புத்தொழில் ஆதார நிதி, பட்டியலினத்தவர்/பழங்குடியினர் தொழில் நிதியம், LaunchPad நிகழ்வுகள் என ஒட்டுமொத்தமாக நமது அரசு முன்னெடுத்த மறுசீரமைப்பு முயற்சிகளாலேயே தமிழ்நாடு இன்று சிகரத்தில் அமர்ந்துள்ளது.
Tamil Nadu is now the 'Best Performer' according to the States' Startup Ranking released by DPIIT today. Having been categorised as the bottom-most 'Emerging Ecosystem' in the second edition of the ranking, the State has leapfrogged to claim the top position in the 4th edition. pic.twitter.com/DxasXZt5dU
— StartupTN (@TheStartupTN) January 16, 2024
தமிழ்நாட்டில் தற்போது 7,600 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. அவற்றுள் 2022-ஆம் ஆண்டில் மட்டும் 2,250 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதே நாம் நிகழ்த்திய பாய்ச்சலுக்குச் சான்று.
இந்தச் சாதனை மாற்றத்தைச் சாத்தியமாக்க உழைத்த குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்!
இந்த இடத்தைத் தக்கவைக்கவும் மேலும் உயரங்களைத் தொட உழைக்கவும் வேண்டுகிறேன்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோப ஜெமா
சிவகார்த்திகேயனுக்கு ரூ.12 லட்சம் கொடுத்த வருமான வரித்துறை!
தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!