இந்தியாவில் 2022ஆம் ஆண்டு சாலை விபத்துகள் குறித்த ஆண்டறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள நிலையில், சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை, ‘இந்தியாவில் சாலை விபத்துகள்-2022′ என்ற ஆண்டறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறைகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகள் மற்றும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 4,61,312 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன, இதில் 1,68,491 பேர் உயிரிழந்துள்ளனர். 4,43,366 பேர் காயமடைந்துள்ளனர்.
இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது விபத்துகளின் எண்ணிக்கை 11.9 சதவிகிதமும், இறப்புகளின் எண்ணிக்கை 9.4 சதவிகிதமும், காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 15.3 சதவிகிதமும் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது.
சாலை விபத்துகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2022ஆம் ஆண்டில் தமிழகத்தில் மொத்தம் 64,105 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன.
2018ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்துள்ளது. 2022ஆம் ஆண்டைப் பொறுத்தவரை இரண்டாவது இடத்தில் மத்தியப் பிரதேசமும், மூன்றாவது இடத்தில் கேரளாவும், நான்காவது இடத்தில் உத்தரப்பிரதேசமும் உள்ளன.
அதிவேகம், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிமுறைகளுக்கு இணங்காதது உள்ளிட்டவை இந்த விபத்துகளுக்குக் காரணங்களாக அமைந்துள்ளன. மேலும், வாகன ஓட்டிகளுக்கு ஓட்டுநர் உரிமங்கள் முழுமையாக பரிசோதனை செய்து கிடைக்கிறதா என்றால், சென்னை தவிர்த்து பல்வேறு மாவட்டங்களில் பெரும்பாலும் முறையாக நடப்பதில்லை.
இன்னொருபுறம் தமிழ்நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கொரோனாவுக்குப் பிறகு பலரும் பொது போக்குவரத்தை தவிர்த்து சொந்த வாகனங்களைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இ-வணிகம் இப்போது மிக எளிதாக கிடைக்கும் வேலையாக இருக்கிறது. அதற்கு நிச்சயம் இருசக்கர வாகனம் தேவை, இதனால் இருசக்கர வாகனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சாலை விபத்துகளை தடுப்பதற்கு வலுவான நடவடிக்கைகளை அமல்படுத்த சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
ஹெல்த் டிப்ஸ்: மழைக்காலங்களில் நோய்களிடமிருந்து தற்காத்து கொள்ள 10 டிப்ஸ் இதோ!
பியூட்டி டிப்ஸ்: வீட்டு வைத்தியங்களின் மூலம் பருக்களை குணப்படுத்த முடியுமா?