டோல்கேட் என்கிற வழிப்பறிக் கொள்ளை…. முடிவு எப்போது?

தமிழகம்

வருகிற செப்டம்பர் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரையில்  உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் கட்டணத்தை  உயர்த்துவதால், கட்டணம் 5% முதல் 7% வரை உயரும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக ஒவ்வொரு ஏப்ரல் மற்றும் செப்டம்பரில் இரண்டு கட்டங்களாக சுங்கக் கட்டணம் திருத்தப்படும்.  இருப்பினும்  கடந்த மக்களவைத் தேர்தல் காரணமாக ஏப்ரல் மாதம் உயர்த்தப்படவில்லை, தேர்தல் முடிவுகள் வந்ததும் ஜூன் மாதம் உயர்த்தப்பட்டது.

இப்போது அடுத்த உயர்வுக்கான சீசன் செப்டம்பரில் வந்திருப்பதால், எவ்வித தளர்வும் காட்டப்படாமல் மேலும் உயர்த்தியிருக்கிறார்கள்.

தற்போது ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், விழுப்புரம், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, திருச்சி, மதுரை, சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை மாற்றியமைக்க முன்மொழியப்பட்டுள்ளது. இந்த டோல் கேட்டுகளில் பயணிக்கும் பல்வேறு வகையான வாகனங்களுக்கான கட்டண உயர்வு ரூ.5 முதல் ரூ.150 வரை இருக்கும்.

பைக், கார், பஸ், லாரி உள்ளிட்ட சாலைப் போக்குவரத்து வாகனங்கள் ஓட்டுவதற்கு வாகனங்களின் இன்வாய்ஸிலிருந்து 10% சதவீதம் முதல் 18% சதவீதம் வரையில் வரி செலுத்தப்படுகிறது.

பஸ், லாரிகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வரி செலுத்தி வருகின்றனர்.  இதைப்போன்று வாகனங்கள் பதிவு செய்யவும், காலாண்டு வரி மற்றும் வாழ்நாள் வரி என ஆண்டுக்கு சுமார் 7 ஆயிரம் கோடி வருவாய் தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கிறது.

இப்படிப்பட்ட வரிகளைத் தாண்டி…  டோல் கேட் எனப்படும்  சுங்கச்சாவடிகளை அமைத்து ஒவ்வொரு வாகன உரிமையாளர்களிடம் அநியாயமாக கட்டணம் வசூலிப்பது ஏன் என்று கொந்தளிக்கிறார்கள் மக்கள்.

“போலீஸ், அரசு அதிகாரிகள் ஐடி கார்டு காட்டினால் விட்டுவிடுவார்கள், எம்எல்ஏ, எம்.பி, மத்திய, மாநில அமைச்சர்கள் பாஸ் பார்த்ததும் விட்டுவிடுகிறார்கள், நீதித் துறையினர் சென்றால் தடையில்லாமல் திறந்து விடுகின்றனர். அதனால் அவர்கள் சுங்கச்சாவடி கட்டணத்தை பற்றி கண்டுகொள்வது இல்லை.

ஆனால், மேற்கண்ட இந்த வகையிலெல்லாம் வராத சாதாரண மக்கள்தான் இந்த டோல் கேட் உயர்வால் கடும் பாதிப்படைந்துள்ளார்கள்” என்று சொல்கிறார்  வாடகை கார் ஓட்டுநரும் உரிமையாளருமான செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சிவா.

டோல் கட்டண உயர்வால்  டோல் கேட் ஊழியர்களுக்கும் வாகன உரிமையாளர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடப்பதை நாம் பார்த்து வருகிறோம்.

சுங்கச்  சாவடி ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் காரல் மார்க்ஸ் மின்னம்பலத்திடம் பேசும்போது,

“ஒவ்வொரு சுங்க சாவடிக்கும்  முன்பு 100 ஊழியர்கள் இருந்தனர்.  அதை தற்போது 50% குறைத்து விட்டனர். மேலும் டோல் கேட் ஊழியர்களுக்கான சம்பளம் ரூ.9,800 முதல் 25 ஆயிரம் ரூபாய்  வரையில்தான்.

ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கும் 25 வருடம், 30 வருடம் என லீஸ் பீரியடு உண்டு.  தேசிய நெடுஞ்சாலையில் தனியார் முதலீடு செய்து சுங்கச்சாவடிகள் அமைத்து பத்து மடங்கு வசூல் செய்துகொண்டு, லீஸ்  பீரியடு முடியும் முன்பே இன்னொரு நிறுவனத்துக்கு கை மாற்றி விடுவார்கள்.

அவர்கள்  ஐந்து வருடம் போட்ட முதலீட்டை வட்டியுடன் எடுத்துக் கொண்டு, வேறு ஒருவருக்கு கைமாற்றி விடுவார்கள். இந்த  கை  மாற்றல்களுக்கு இடையில் லீஸ் காலமே முடிந்துவிடும்.

ஆனால் அந்த நிறுவனம் டோல் கேட்டை அரசிடம் ஒப்படைக்காமல், ‘நாங்க  அக்ரிமென்ட் போட்டு ஒரு வருடம்தான் ஆகுது.  போட்ட முதலீடுகளை எடுக்கவில்லை’ என்று  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை பார்த்து கவனித்து விட்டு இன்னும் வசூலைத்  தொடர்கிறார்கள்.

கொடுமை என்னவென்றால்  சில சாலைகளுக்கு ஆறு வழி சாலை என அறிவிப்புதான்  வந்திருக்கும். அது நான்கு வழிச் சாலையாகவே இன்னமும் இருக்கும். ஆனால், ஆறு வழி சாலைக்கான கட்டணத்தை வசூல் செய்து வருகின்றனர்.

பல சுங்கச்சாவடிகளில்  ஆம்புலன்ஸ் இல்லை, அவசர உதவிகள்  இல்லை, சாலை பராமரிப்பு இல்லை.  ஆனால் வசூல் மட்டும் தடையில்லாமல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு  அனைத்து அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள 57 சுங்கச்சாவடிகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 50 கோடி வசூலாகிறது.  அப்படின்னா பார்த்துக்குங்க. ஆனால் ஊழியர்களுக்கு முறையான ஊதியம் இல்லை”  என்றார் காரல் மார்க்ஸ்.

இந்த டோல் கேட் கட்டணங்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகங்களும் தப்பவில்லை.

தமிழக அரசு எட்டு போக்குவரத்து கழகங்களை  நடத்தி வருகிறது.  1. மாநகர போக்குவரத்துக் கழகம், 2.  அரசு விரைவுப் போக்குவரத்து கழகம், 3.  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்), 4.  சேலம், 5.  கோவை, 6.  கும்பகோணம், 7.  மதுரை, 8 . அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி .

இந்த 8 போக்குவரத்துக் கழகங்களில் மொத்தம் 20,010 பேருந்துகள் உள்ளன, இதில் ஆயிரக்கணக்கான ‘பிங்க் பஸ்களும்’ உள்ளன. அதாவது பெண்களுக்கு இலவச பயணம் அளிக்கும் பேருந்துகள்.  அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் பயணிக்க இலவசம்.

அப்படிப்பட்ட அரசு பேருந்துகளுக்கு ஒவ்வொரு சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு பேருந்துகளுக்கும் மாதம் டோல்  கட்டணமாக ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.  ஆண்டுக்கு ரூ.360 கோடி சுங்கச்சாவடிகளுக்கு வழங்கி வருகின்றது அரசு போக்குவரத்துக் கழகம்.

ஆனால், தனியார் கல்லூரி, பள்ளி வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது இல்லை. தனியார் பள்ளி கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் பேருந்து கட்டணம் என்று தனியாக வசூலிக்கப்படுகிறது. ஆனபோதும் தனியார் பேருந்துகளுக்கு டோல் கேட் கட்டணம் இல்லை.

இப்படி தாறுமாறாக வசூல் செய்வதால் 2022- 2023 இல் 57 சுங்கச்சாவடிகளில் ரூ.16,638.99 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது, அதில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கு விலக்கு அளித்தால் ஆண்டுக்கு ரூ.360 கோடி இழப்பைத் தவிர்க்கலாம்  என்கிறார்கள் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள்.

முன்னாள் நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசும்போது,

“தமிழ்நாட்டில்  மட்டும் சுங்கச்சாவடிகளின் ஒரு மாத வசூல்  ரூ.1,386 கோடி .  இதில் சுமார் ரூ.300 கோடி அதிகார வர்க்கங்களுக்கு கையூட்டாக பிரித்து கொடுத்து வருகின்றனர். இதனால்தான் சுங்கச்சாவடிகளுக்கு எதிராக அதிகாரம் மிக்க அரசியல்வாதிகள் பேசுவதும் இல்லை , கட்டண உயர்வுக்கு கவலைப் படுவதும் இல்லை.  அவர்கள் வாகனங்களுக்கு கட்டணமும்  இல்லை.

அப்பாவி வாகன உரிமையாளர்கள் தான் மனம் நொந்து பயணம் செய்கின்றனர். நாள்தோறும் லட்ச கணக்கில் சுங்கச்சாவடிகளை கடக்கும் ஓட்டுநர் உரிமையாளர்களின் கோபம் உச்சமடைந்தால் விளைவுகள் எப்படி இருக்கும் என்று அரசு உணரவேண்டும்” என்கிறார்.

-வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பாலியல் வழக்கு: 10 நாட்களில் மரண தண்டனை… மம்தா ஆவேசம்!

மாணவர்கள் போராட்டம் எதிரொலி : இழுத்து மூடப்பட்ட அரசு கல்லூரி!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0