காலாவதியான தடுப்பூசிகள் : தமிழக அரசு எடுத்த முடிவு!
தமிழகத்தில் இரண்டு மாதங்களில் காலாவதியாகும் நிலையில் உள்ள 60 ஆயிரம் கோவாக்சின் டோஸ்களை தமிழக அரசு மத்திய அரசுக்கு திருப்பி அனுப்ப உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, “இந்த ஆண்டு (2022) நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் காலாவதியாகும் நிலையில் உள்ள கோவாக்சின் தடுப்பூசிகள் தமிழகத்தில் 60,280 டோஸ்கள் உள்ளன.
காலாவதியான தடுப்பூசிகளை மத்திய அரசுக்கு திரும்ப அனுப்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும்.
பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குனரகத்தின் சார்பில், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு காலாவதியான தடுப்பூசிகளைத் திருப்பி அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் காலாவதியாகும் கோவேக்சின் டோஸ்களுக்கு பதிலாக பாரத் பயோடெக் மூலம் நீண்ட ஆயுளுடன் கூடிய தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.” என்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனர் டி. செல்வ விநாயகம் கூறும்போது,
“காலாவதியான கோவேக்சின் தடுப்பூசிகளை மத்திய அரசுக்கு திரும்ப அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இரண்டாவது டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்வது குறைவாக உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோர் 96.6 சதவிகிதம் பேர் முதல் தவணை தடுப்பூசிகள் செலுத்தியுள்ளனர்.
இருப்பினும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி 91.66 சதவிகிதம் பேர் மட்டுமே செலுத்தியுள்ளனர். 12 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு 94.6 சதவிகிதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி 77.87 சதவிகிதம் செலுத்தப்பட்டுள்ளது.
15 – 18 வயதிலானவர்களுக்கு 91.34 சதவிகிதம் முதல் தவணை தடுப்பூசியும், 77.86 சதவிகிதம் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதை தமிழகத்தில் அதிகப்படுத்த வேண்டும்” என்று செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
செல்வம்
தெலுங்கு சூப்பர்ஸ்டார் கிருஷ்ணா காலமானார்!
சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள்!