லிட்டருக்கு ரூ.4! தனியார் பால் விலை இன்று முதல் உயர்வு!

Published On:

| By Prakash

தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 12) முதல் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பால் பாக்கெட்களின் விலை உயர்கிறது. லிட்டருக்கு 4 ரூபாய் விலை உயர இருக்கிறது. இந்த திடீர் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு ஆவின் நிறுவனம் 16.41 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்களை மட்டுமே விற்பனை செய்கிறது. ஆனால், தனியார் நிறுவனங்கள் 1.25 கோடி லிட்டர் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகின்றன. இதனால், ஆவின் பாலைவிட தனியார் நிறுவன பாலின் தேவை அதிகமாக உள்ளது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மற்றும் மே (இரண்டு முறை) மாதங்களில் தனியார் நிறுவன பால் பாக்கெட்களின் விலை உயர்த்தப்பட்டது. அப்போது பால் மற்றும் தயிர் விற்பனை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், மூன்றாவது முறையாக தனியார் பால் விற்பனை விலை இன்று (ஆகஸ்ட் 12) முதல் உயர்த்தப்பட இருக்கிறது.

தமிழகத்தின் பால் தேவையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு 84 சதவிகித பால் தேவையாக இருக்கிறது. இதைக் கருத்தில்கொண்டே அந்நிறுவனங்கள் கடந்த 8 மாதங்களுக்குள் 3 முறை விலையேற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றன. இதனால், பால் சம்பந்தப்பட்ட பொருள்களின் விலையும் உயர இருப்பதால் அடித்தட்டு மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் அது, “இந்த தனியார் நிறுவனங்களின் தன்னிச்சையான விலை உயர்வு அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும். இப்படி அடிக்கடி பால் விலையை உயர்த்தும் தனியார் நிறுவனங்களை வரைமுறைப்படுத்த அரசே தனியார் நிறுவனத்துக்கான பாலின் விலையையும் நிர்ணயம் செய்யும் வகையில் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க வேண்டும் என அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெ.பிரகாஷ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share