துடுப்புகள் இல்லாத படகு… ஆரம்ப சுகாதார நிலையங்களின் அவலங்கள்!

தமிழகம்

தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்புகள் வலுவாக இருப்பதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், மாவட்டங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருத்துவர்கள் இல்லாத அவல நிலை நீடிக்கிறது.

கிராம பகுதியில் இருக்கும் பொதுமக்களுக்கு காய்ச்சலோ, பாம்பு கடியோ உடனே அவர்கள் செல்வது அருகில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தான். அங்கிருக்கும் டாக்டர், நோயாளியை கவனித்து ஊசி போட்டு தகுந்த சிகிச்சை அளிப்பார்.

ஆனால், கடந்த சில மாதங்களாக வட்டார சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால், பணியில் இருக்கும் செவிலியர்கள் மாத்திரை மட்டுமே கொடுத்து நோயாளிகளை அனுப்புவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.

குறிப்பாக, கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் மேல் குமாரமங்கலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர் மற்றும் பொதுமக்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பொதுமக்கள், “ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் மருத்துவர்கள் இருப்பதில்லை. இதனால் காய்ச்சல், இருமல், சளி, பாம்புக்கடி போன்ற அவசர சிகிச்சைக்காக வரும் பொதுமக்களுக்கு டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் செவிலியர்கள் ஊசி போடுவதில்லை” என்கிறார்கள்.

பொதுமக்களின் இந்த குற்றச்சாட்டு குறித்து கடலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்கொடியிடம் கேட்டபோது, “அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறை இருக்கிறது. இதனால் இரவு நேரத்தில் டாக்டர்கள் இருப்பதில்லை. டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் செவிலியர்கள் ஊசி போடக்கூடாது. அதனால் இரவு நேரத்தில் மாத்திரைகள் மட்டும் கொடுக்க வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதே நிலை தான் நீடிக்கிறது என்கிறார்கள் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்தியல் துறை அதிகாரிகள்.

இதுதொடர்பாக அவர்கள்  நம்மிடம் கூறும்போது, “தமிழக அரசின் திட்டங்கள் பெயரளவில் தான் இருக்கிறதே தவிர, நடைமுறையில் இல்லை. தமிழகத்தில் 385 ஒன்றியங்கள் இருக்கிறது. இந்த ஒன்றியங்களில் ஒரு ஒன்றியத்திற்கு 1 வட்டார சுகாதார நிலையமும், 3 முதல் 5 வரையில் துணை சுகாதார நிலையமும் உள்ளது. ஆக மொத்தம் 1,422 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.

ஒரு வட்டார சுகாதார நிலையத்தில் நான்கு டாக்டர்கள் இருக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 டாக்டர்கள் இருக்க வேண்டும். பகல் வேளையில் ஒரு டாக்டர், இரவுவேளையில் ஒரு டாக்டர் என சுழற்சிமுறையில் பணியில் இருப்பார்கள். இதுபோக ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் பள்ளி குழந்தைகள் பராமரிப்புக்காக ஒரு டாக்டர், ஒரு வேன், ஒரு செவிலியர் இருப்பார்கள்.

அதேபோலதான் மக்களை தேடி மருத்துவம், நடமாடும் மருத்துவம், புற்றுநோய் மற்றும் மனநோய் பரமாரிப்பு ஸ்கீம்களுக்கும் தலா ஒரு டாக்டர், ஒரு வேன், ஒரு செவிலியர் இருப்பார்கள்.

மொத்தமாக ஒரு ஒன்றியத்திற்கு 14 டாக்டர்கள் இருக்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஸ்கீம் மருத்துவர்கள் 5,390 மருத்துவர்கள் இருக்க வேண்டும். ஆனால், இதில் பாதி அளவிற்கு கூட மருத்துவர்கள் இல்லை.

அரசு மருத்துவமனை மற்றும் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்தியல் துறை இவைகளில் தற்போது சுமார் 20 ஆயிரம் மருத்துவ பணியிடங்கள் காலியாக இருக்கிறது.

சில வட்டார சுகாதார நிலையங்களில் கணக்குக்காக நோயாளிகள் வந்ததாகவும், உள் நோயாளிகள் சேர்க்கப்பட்டு சிகிச்சை கொடுப்பதாகவும் ரெக்கார்டு எழுதுகிறார்கள்.

இதுபோன்ற குறைகள் வட்டார சுகாதார நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அன்றாடம் அதிகரித்து வருகிறது. அரசின் திட்டங்கள் மக்களுக்கான சிறப்பான திட்டங்களாக இருந்தாலும், பேப்பர் அளவில் மட்டும் இருக்கிறதே தவிர நடைமுறையில் இல்லை என்பது தான் வேதனையாக இருக்கிறது.

இந்த பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு தமிழக அரசு உடனடியாக மருத்துவத்துறை மீது கவனம் செலுத்த வேண்டும் என்பதே மருத்துவர்களின் கோரிக்கை” என்கிறார்கள்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டிடங்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் இருந்தும் மருத்துவர்கள் இல்லாதது துடுப்புகள் இல்லாத படகு போன்று உள்ளது. இதனால் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வணங்காமுடி 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விருதுநகருக்கு ஸ்டாலின் அறிவித்த புதிய திட்டங்கள் : முழு விவரம்!

தேசிய விருது பெற்ற எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் காலமானார்!

+1
0
+1
0
+1
1
+1
7
+1
0
+1
3
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *