ஒற்றுமை திருவிழா என்று அழைக்கப்படும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (மார்ச் 3) துவங்குகிறது. இதில் பங்கேற்க விண்ணப்பித்தவர்கள் ராமேஸ்வரத்திலிருந்து படகுகள் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ராமேஸ்வரம் அருகில் உள்ள கச்சத்தீவில் நடைபெறும் அந்தோணியார் திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவில் தமிழகம் மற்றும் இலங்கை மக்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டுக்கான அந்தோணியார் திருவிழா இன்று மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கி நாளையுடன் நிறைவடைகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 60 விசைப்படகுகள் மற்றும் 12 நாட்டுப் படகுகள் மூலமாக தமிழகத்தை சேர்ந்த 2048 பேர் சென்றனர். மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து கச்சத்தீவு பயணத்தை துவக்கி வைத்தார்.
முன்னதாக பயணிகளுடைய ஆதார், பயண அடையாள அட்டை, காவல்துறை தரப்பில் வழங்கக்கூடிய குற்றமில்லா சான்று சரிபார்க்கப்பட்டது.
செல்வம்