தமிழக சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது ஆந்திராவில் தாக்குதல்: வைகோ கண்டனம்

Published On:

| By Minnambalam

திருப்பதியில் தனியார் சட்டக்கல்லூரியில் படித்துவரும் தமிழக மாணவர்கள் சிலர் தேர்வெழுதிவிட்டு காரில் ஊருக்குத் திரும்பியிருக்கின்றனர்.

அப்போது வடமாலாப்பேட்டை சுங்கச்சாவடியில்,  ஃபாஸ்ட் டேக் மூலம் சுங்கக் கட்டணம் செலுத்தும்போது, சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், தமிழக மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

வெறும் வாக்குவாதம் ஒருகட்டத்தில் இரு தரப்பினருக்குமிடையே தாக்குதலாக முற்றியது.

சுங்கச்சாவடி ஊழியர்கள் இரும்புக்கம்பி போன்றவற்றால் தமிழக மாணவர்களைச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், போலீஸார் அங்கு வந்ததும், மோதல் கலைக்கப்பட்டது. மேலும், சுங்கச்சாவடி ஊழியர்களின் தாக்குதலில் காயமடைந்த தமிழக மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல், தாக்குதலின்போது போலீஸார் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டதாக மாணவர்கள் குற்றம்சாட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் இந்தத் தாக்குதல் குறித்து தன் கருத்தைத் தெரிவித்துள்ள வைகோ, “ஆந்திராவில் சுங்கச்சாவடியினர் தமிழக சட்டக் கல்லூரி மாணவர்களை கடுமையாகத் தாக்கி உள்ளனர்.

அவர்கள் காரில் ஃபாஸ்ட் டேக்கில் பணம் இருந்தும் கூட, சுங்கச்சாவடியில் இருக்கும்  ஃபாஸ்ட் டேக் சோதனை செய்யும் கருவி பழுதுபட்டுள்ளதால், பணத்தை கட்டச் சொல்லி மிரட்டி உள்ளனர்.

அதற்கு சட்டக் கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டைகள், கம்பிகளைக் கொண்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது கடுமையாகத் தாக்கி உள்ளனர்.

இதில் மாணவர்கள் பலர் காயம் அடைந்தனர். சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, தமிழக சட்டக் கல்லூரி மாணவர்களில் காயம்பட்டவர்கள் மீது ஆந்திர காவல்துறை வழக்கு பதிவு செய்து உள்ளது.

இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். வழக்குகளை வாபஸ் பெறுவதோடு, இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட சுங்கச்சாவடியினர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

-ராஜ்

ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு மோடிதான் பொறுப்பேற்க வேண்டும் – திருமாவளவன்!

தண்ணீர் கலந்த பெட்ரோல்: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

Comments are closed.